திருமணமான 3½ ஆண்டில் கர்ப்பிணி தூக்கில் பிணமாக தொங்கினார்


திருமணமான 3½ ஆண்டில் கர்ப்பிணி தூக்கில் பிணமாக தொங்கினார்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:45 AM IST (Updated: 27 Jun 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே திருமணமான 3½ ஆண்டில் கர்ப்பிணி தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக பெரியப்பா போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோமல் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய தம்பி முத்துகிருஷ்ணனின் மகள் சரண்யா(வயது 29). பட்டதாரி. சரண்யாவின் தந்தையும், தாயும் இறந்து விட்டனர். இதனால் சரண்யாவை, ராஜேந்திரன் வளர்த்து வந்தார். இந்த நிலையில் சரண்யாவுக்கும், மயிலாடுதுறை அறுபத்து மூவர்பேட்டையை சேர்ந்த பாலு மகனும், என்ஜினீயருமான பாலாஜிக்கும்(33) கடந்த 23.3.2015 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது சரண்யா கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் சரண்யாவை அவருடைய கணவர் பாலாஜி வேலைக்கு செல்லும்படி அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் பாலாஜி, மாமனார் பாலு, மாமியார் தமிழரசி ஆகிய 3 பேரும் சேர்ந்து சரண்யாவிடம் மேலும் சீர்வரிசை பொருட்கள், பணம் வாங்கி வரும்படி கூறியும், செல்போனில் பெரியப்பா, பெரியம்மாவிடம் பேசக்கூடாது என்றும் கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் சரண்யா மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சரண்யா, வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சரண்யாவின் பெரியப்பா ராஜேந்திரனுக்கு, பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று சரண்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரண்யாவுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகளே ஆவதால் அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்று மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக சரண்யாவின் பெரியப்பா ராஜேந்திரன், மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழியிடம் சரண்யாவின் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார். 

Next Story