சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:15 AM IST (Updated: 27 Jun 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அண்ணாதுரை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நேற்று நடந்தது. தஞ்சை ரெயிலடியில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கலெக்டர் அண்ணாதுரை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் நடத்தப்படுகிறது. போதைப்பொருட்களை உபயோகிப்பதால் இருதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுவதுடன் மன அழுத்தமும் ஏற்படும்.

போதைப்பொருட்களை பயிர் செய்தல், வைத்திருத்தல், வாங்குதல், கடத்தல் போன்ற குற்றங்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதமும், 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படும். இளைஞர்கள், மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இவற்றிற்கு அடிமையானவர்களை டாக்டர்களிடம் அழைத்து சென்று முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று வாழ்க்கை முறையை மாற்றி நல்வழிப்படுத்த வேண்டும். போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றிய தகவல்களை போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலமானது காந்திஜிசாலை, இர்வீன்பாலம், பழைய பஸ் நிலையம், கீழராஜவீதி வழியாக சென்று அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரத்தினவேல், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி, உதவி ஆணையர்(கலால்) தனசெல்வம், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) மணிவண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாசில்தார்கள் தங்கபிரபாகரன், அருணகிரி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

Next Story