8 வழிச்சாலை எதிர்ப்பு: வீடுகள், எல்லைக்கற்களில் விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்


8 வழிச்சாலை எதிர்ப்பு: வீடுகள், எல்லைக்கற்களில் விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2018 5:58 AM IST (Updated: 27 Jun 2018 5:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், அளவீடு செய்து நடப்பட்ட எல்லைக்கற்களில் விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டப்பணிக்கு தேவையான நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் அரியானூர், பூலாவரி, நிலவாரப்பட்டி, உடையாப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம், ராமலிங்கபுரம், மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, சுக்கம்பட்டி, வெள்ளியம்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர் வரை இந்த சாலை பணிக்கு நில அளவீடு நடந்து முடிந்துள்ளது.

இந்த பகுதிகளில் நில அளவீட்டின் போது, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் வழியாக இந்த சாலை அமைக்கக்கூடாது என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை சமாதானம் செய்து விட்டு, மறுபுறம் நில அளவீடு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்த சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, சேலம் அருகே குப்பனூர் பகுதியில் உள்ள சீரிக்காடு, வெள்ளியம்பட்டி மற்றும் மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் வீடுகள், விவசாய நிலங்களில் உள்ள எல்லைக்கற்களில் கருப்புக்கொடிகளை விவசாயிகள் கட்டி திடீர் போராட்டம் நடத்தினர். குறிப்பாக குப்பனூர் அருகே சீரிக்காட்டில் விவசாய நிலத்தில் உள்ள சிமெண்டு தூணில் கருப்புக்கொடியை கட்டி இருந்தனர்.

மேலும் சின்னகவுண்டா புரம் பகுதியில் உள்ள ராமலிங்கபுரத்தில் பசுமை வழிச்சாலையால் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட இருக்கின்றன. விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராமலிங்கபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார், ராமலிங்கபுரத்திற்கு சென்று கருப்புக்கொடி கட்டியிருந்த வீடுகளில் அவற்றை அகற்றிவிடுமாறு விவசாயிகளிடம் சமாதானம் பேசினர். இதையடுத்து இந்த கிராம விவசாயிகள் தங்கள் வீடுகளில் கட்டியிருந்த கருப்புக்கொடிகளை அகற்றினர்.

வீடுகள், விவசாய நில எல்லைக்கற்களில் விவசாயிகள் கருப்புக்கொடி கட்டியதால் சேலம் அருகே குப்பனூர், ராமலிங்கபுரம் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பாப்பம்பாடி, பட்டுகோணாம்பட்டி, மஞ்சவாடி ஆகிய ஊராட்சிகளில் பசுமை வழிச்சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணியில் வருவாய்த்துறையினர் நேற்று 2-வது நாளாக ஈடுபட்டனர். அப்போது நிலம், வீடு, தோட்டம் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யப்பட்டது.

சாமியாபுரம் கூட்டுரோடு பகுதியில் அளவீடு செய்தபோது அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘எங்களுக்கு வாழ்வளிக்கும் நிலத்தை தர மாட்டோம். இழப்பீடு தொகை எவ்வளவு வழங்கப்படும் என்று தெரியவில்லை. சரியான மதிப்பீடு தொகையை தரவேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் தொடர்ந்து அளவீடு பணி நடைபெற்றது.

நடுப்பட்டியில் உள்ள வயல் பகுதிகளில் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்தனர். நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோம்பூர் பகுதியில் வீடுகளில் கிராமமக்கள் கருப்புக்கொடி கட்டி இருந்தனர். மேலும் அங்குள்ள தர்காவிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story