29 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


29 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 28 Jun 2018 3:30 AM IST (Updated: 27 Jun 2018 7:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 250 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சக்கர சைக்கிள், பிரெய்லி கைக்கெடிகாரம், நவீன அதிரும் ஊன்றுகோல், காதொலி கருவி உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பாராட்டினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வேலைவாய்ப்பு 

தமிழக அரசு உத்தரவுப்படி மாவட்டம் தோறும் 2 மாதத்துக்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் குறைகளை உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு, பென்சன், கடன் உதவி கேட்டு மனு கொடுத்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டமாக வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, தூத்துக்குடியில் உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் உதவி கலெக்டர் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், திட்ட மேலாளர் சுவர்ணலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story