சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தவர் கைது
சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
விசைத்தறி உரிமையாளர்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 6–ம் தெருவை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (வயது 48). இவர் சங்கரன்கோவில் பகுதியில் விசைத்தறி கூடங்கள் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது செல்போனில் பேஸ்புக் (முகநூல்) பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அதன்மூலம் சேலம் மாவட்டம் மணக்காடு பகுதியை சேர்ந்த சங்கர் (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது. 2 பேரும் தங்களை பற்றிய தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறி உள்ளனர். அதன் மூலம் கடந்த 2017–ம் ஆண்டு சங்கரன்கோவிலுக்கு வந்த சங்கர், ராமசுப்பிரமணியனிடம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 350 மதிப்பிலான சேலை உள்ளிட்ட துணி ரகங்களை வாங்கியதாக தெரிகிறது. அதற்கு பணமும் கொடுத்து விட்டார்.
மோசடி
அதன் பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 953–க்கும், செப்டம்பர் மாதம் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்து 800–க்கும் துணி ரகங்களை ராமசுப்பிரமணியனிடம் இருந்து சங்கர் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணமாக கொடுக்காமல் சங்கர் வங்கி காசோலையாக கொடுத்துள்ளார். அதை வாங்கிய ராமசுப்பிரமணியன் அந்த காசோலையை வங்கியில் செலுத்தினார். ஆனால் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த ராமசுப்பிரமணியன் இதுகுறித்து சங்கரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் சங்கர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
கைது
இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கர் சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளார். அவரிடம் இதுகுறித்து ராமசுப்பிரமணியன் கேட்டுள்ளார். ஆனால் சங்கர் சரியாக பதில் சொல்லாமல் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. உடனே ராமசுப்பிரமணியன் இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story