சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்க இலக்கு: கலெக்டர் ராமன் தகவல்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
காட்பாடி,
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். தொழில் மைய உதவி பொறியாளர் வசந்தகுமார் வரவேற்றார்.
இதில், சிறந்த தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் ராமன் பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் 100 சதவீதம் நன்றாக செயல்படுகின்றன. இதற்கு தொழில் மைய அதிகாரிகளும், வங்கி அதிகாரிகளும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். பெரிய தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்றால், சிறு தொழில்கள் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் சிறு தொழில்கள் வளர்ச்சி பெற போக்குவரத்து வசதியும் ஒரு காரணமாக உள்ளது. விரைவில் வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதனால் தொழிற் வளர்ச்சி மாவட்டத்தில் மேலும் பெருகும்.
புதிய தொழில் முனைவோர், தொழிற் நிறுவன வளர்ச்சி திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழில் கடன், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம், எந்திரங்களுக்கான முதலீட்டு மானியம், மின்மானியம், மின்னாக்கி மானியம், பின்முனை வட்டி மானியம் ஆகிய திட்டங்கள் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.1,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.200 கோடி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து தொழில் முனைவோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி வேலூர் மண்டல மேலாளர் எஸ்.சுந்தர்ராஜ், சிட்கோ சங்கத்தலைவர் அமிர்தகணேசன், வேலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சங்கத்தலைவர் சாமிநாதன், ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் வெங்கடேஷ், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மணிவண்ணன் உள்பட பல்வேறு வங்கிகள் மற்றும் திட்ட இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டு பேசினார்கள். முடிவில் மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் அசோகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story