ஆர்.டி.ஓ. பணிமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


ஆர்.டி.ஓ. பணிமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 28 Jun 2018 4:15 AM IST (Updated: 28 Jun 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.டி.ஓ. பணிமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

ஆர்.டி.ஓ. பணிமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர் வருவாய் ஆர்.டி.ஓ.வாக இருப்பவர் திவ்யஸ்ரீ. இவர் நேற்று முன்தினம் பணியிட மாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் வேறு இடத்திற்கு செல்லாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதை அறிந்த திருவள்ளூர் மாவட்ட இருளர் முன்னேற்ற சங்க நிறுவனர் இரா.பிரபு தலைமையில் மாவட்ட செயலாளர் சந்திரபாபு, மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், கூட்டமைப்பு தலைவர் குமார் என திரளான இருளர் இன மக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

திருவள்ளூர் ஆர்.டி.ஓ.வாக உள்ள திவ்யஸ்ரீ திருவள்ளூர் தாலுகா, ஊத்துக்கோட்டை, ஆவடி ஆகிய தாலுகாக்களில் வசிக்கும் இருளர் இன மக்களாகிய எங்களுக்கு சாதி சான்றிதழ், இலவச பட்டா போன்றவற்றை எங்கள் வீடுகளை தேடி வந்து வழங்கியுள்ளார்.

மேலும் அவர் நாங்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது காலதாமதம் செய்யாமல் எங்களுக்கு வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, சாதி சான்றிதழ், வீட்டுமனைப்பட்டா போன்றவற்றை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவர் பணிமாற்றம் செய்யப்பட்டதை அறிந்த நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். எனவே அவரை பணியிட மாற்றம் செய்யாமல் மீண்டும் திருவள்ளூரிலேயே பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story