பேரம்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் தீ விபத்து: மதுபாட்டில்கள் வெடித்து சிதறின
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை கிராமத்தில் டாஸ்மாக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மதுபாட்டில்கள் வெடித்து சிதறின.
திருவள்ளூர்,
பேரம்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மதுபாட்டில்கள் வெடித்து சிதறின.
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக ஆர்.கே.பேட்டையை அடுத்த அம்மையார் குப்பத்தை சேர்ந்த வேலாயுதம் (வயது42) என்பவர் உள்ளார். விற்பனையாளர்களாக திருவள்ளூரை அடுத்த நாராயணபுரத்தை சேர்ந்த மோகன்தாஸ் (35), பள்ளிப்பட்டு அடுத்த புதுப்பட்டு பகுதியை சேர்ந்த குப்புராஜ் (38), திருத்தணியை அடுத்த புஜ்ஜிரெட்டிப்பள்ளியை சேர்ந்த ஏழுமலை (40) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையின் மேற்பார்வையாளர் வேலாயுதம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை 9 மணியளவில் அந்த டாஸ்மாக் கடையின் உள்ளே இருந்து கரும்புகை வந்தது. மேலும் மதுபாட்டில்கள் வெடித்து சிதறும் சத்தமும் கேட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக திருவள்ளூரில் உள்ள தீயணைப்புத்துறையினருக்கும் கடையில் பணிபுரிபவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இது குறித்து பேரம்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பிரசன்னா, தங்கராஜா, சுரேஷ், கண்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர். மேலும் டாஸ்மாக் விற்பனையாளர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கடையை திறந்தனர்.
அப்போது அந்த டாஸ்மாக் கடையில் குளிர்சாதன பெட்டிக்கு செல்லும் மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டதால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
அங்கு விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினார்கள். தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம் அடைந்தது. மேலும் அந்த கடையின் உள்ளே இருந்த மேசை, நாற்காலிகளும், பில் புத்தகங்களும், தீயில் கருகியது. கடையின் கல்லாவில் இருந்த ரூ.3,500 தீயில் கருகியது. இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தீவிபத்தில் இருந்து தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story