சில அரசியல் கட்சிகள் தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற முயற்சி செய்கின்றன: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


சில அரசியல் கட்சிகள் தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற முயற்சி செய்கின்றன: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Jun 2018 4:30 AM IST (Updated: 28 Jun 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி சில அரசியல் கட்சிகள் தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சென்னை,

வளர்ச்சி திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி சில அரசியல் கட்சிகள் தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சட்டசபையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நமது மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு, உடனடியாக வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் மற்ற குற்றங்களைப் போலவே குறைந்து வருகின்றன.

உதாரணமாக, 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான சில முக்கிய குற்றங்கள் தொடர்பாக சராசரியாக ஆண்டொன்றுக்கு 2,941 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான அக்குற்றங்கள் தொடர்பாக சராசரியாக 2,660 வழக்குகள் மட்டுமே தாக்கலாகியுள்ளன.

இதன் மூலம் அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருகின்றன என்பது தெளிவாக தெரிய வருகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவர அறிக்கையின்படி, கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்களின் குற்ற விகிதம் 10.7 ஆகும். இதனை தேசிய சராசரியான 51.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 40.7 புள்ளிகள் குறைவாக உள்ளன.

பெண்களுக்கு எதிராக தாக்கலாகும் மொத்த குற்றங்களும், குற்ற விகிதமும் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் பெருமளவு குறைவாகவே இருப்பது தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளி விவரங்கள் வாயிலாக தெளிவாகிறது.

மத்திய உள்துறை அமைச்சக அமைப்பின் புள்ளி விவரத்தின்படி, நாடு முழுவதும் நடைபெறக்கூடிய போராட்டங்களில், 15 சதவீதம் தமிழ்நாட்டில் நடைபெறுவதாகவும், ஒவ்வொரு நாளும் மாநிலம் முழுவதிலும் சராசரியாக 47 போராட்டங்கள் நடைபெறுவதாக தெரியவருகிறது.

2017-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், மத அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினர் என மொத்தம் நடைபெற்ற போராட்டங்களின் எண்ணிக்கை 31,269 ஆகும்.

அரசு, உத்வேகத்துடன் நலத்திட்டங்களையும், வளர்ச்சித்திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தி, ஒரு சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நம் மாநிலத்தை ஒரு போராட்டக்களமாக மாற்ற முயற்சித்து வருகின்றன.

இவர்களது உண்மையான நோக்கமே, பொதுமக்களை திசை திருப்பி, அதில் அரசியல் ரீதியான லாபத்தை ஈட்ட முயல்வது தானே தவிர, பொதுமக்கள் மீதான அக்கறையினால் அல்ல. உண்மை என்ன என்பதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும் பல்வேறு உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற ஜனநாயக உரிமைகளை, அரசியமைப்புச் சட்டம் நமக்கு அளித்துள்ள போதும், அவற்றை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பது பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் நடைபெறும் இவ்வரசு, பல பிரச்சினைகளை திறமையாக சமாளித்து வெற்றிகளை ஈட்டி வருவதைப் பார்த்து, அரசிற்கு மக்களிடையே நற்பெயர் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில், சிறிய குறைகளையும், பூதாகரமாக்கி அறிக்கைகள் விடுவது, போராட்டங்களை நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒரு சிலர் தங்கள் தலையாய கடமையாக மேற்கொண்டுள்ளனர்.

இந்த அரசு மீது குறைகூற காரணம் ஏதுமின்றி, சில கட்சிகளைச் சார்ந்தவர்கள், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும், பொது அமைதி பாதிக்கப்பட்டு விட்டது என்றும், உண்மைக்கு மாறாக தொடர்ந்து ஊடகங்களில் அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டிகள் அளித்தும் வருகின்றனர்.

மேலும், அக்கட்சிகள், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறகு, அ.தி.மு.க. நிலை குலைந்துவிடும், அதனால் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிடலாம் என பகல் கனவு கண்டு வந்தவர்கள், அது இயலாமல் போகவே, எடுத்ததற்கு எல்லாம் போராட்டம் என அறிவித்து, அன்றாடம் போராட்டங்களில் ஈடுபட்டு, மாநிலத்தில் ஏதோ சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, மக்களை திசை திருப்பி, தங்களின் குறிக்கோளை அடைய முயன்று, தோல்வி கண்டனர்.

இவர்களின் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல்பாடுகள், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதுடன், இவர்கள் எத்தகையவர்கள் என்பதையும் வெளிக்காட்டியுள்ளது. மேலும், தமிழ்நாட்டு மக்கள் முடிவு எடுப்பதில் மிகவும் தெளிவாக உள்ள காரணத்தினால், இவர்களது பகல் கனவு 2021-ம் ஆண்டிலும் நிறைவேறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

2016-ம் ஆண்டைய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, சொத்து சம்பந்தமான குற்றங்களில் நமது மாநிலத்தின் நிலை என்ன என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவ்வறிக்கையின்படி, நமது மாநிலத்தில் 2016-ம் ஆண்டு தாக்கலான வன்குற்றங்களான, கொலை, வரதட்சணை கொலை, கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை, கொள்ளை, காயம் விளைவித்தல், கடத்தல், தீவைப்பு போன்ற குற்றங்களை, மற்ற மாநிலங்களில் தாக்கலான வன்குற்றங்களோடு ஒப்பிடுகையில், நமது மாநிலத்தில் தாக்கலான குற்றங்கள் குறைந்தே உள்ளன.


பொதுவாக, குற்ற நிகழ்வுகளை ஒப்பிடும்போது, குற்ற விகிதம் என்ற எண்ணிக்கை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு எத்தனை குற்றங்கள் நடந்துள்ளன என்பதன் குறியீடு ஆகும். கடந்த 2016-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடந்த வன்குற்றங்களின் குற்ற விகிதம் 15.6 ஆகும். இது தேசிய சராசரியான 33 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 17.4 புள்ளிகள் குறைவாகவே உள்ளது.

2016-ம் ஆண்டின், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, மாநிலத்தில் குற்றங்கள் தாக்கலாவதும், குற்ற விகிதமும், மற்ற மாநிலங்களைவிட மிகவும் குறைவாகவும், தேசிய குற்ற விகிதத்தைவிட, நமது மாநில குற்ற விகிதம் தொடர்ந்து குறைவாக இருந்து வருவதும், தெளிவாக தெரியவருகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story