உடுமலையில் மனைகள் வரன்முறைக்கான 2–ம் கட்ட சிறப்பு முகாமில் திரண்ட பொதுமக்கள், ஊழியர்கள் திணறல்


உடுமலையில் மனைகள் வரன்முறைக்கான 2–ம் கட்ட சிறப்பு முகாமில் திரண்ட பொதுமக்கள், ஊழியர்கள் திணறல்
x
தினத்தந்தி 28 Jun 2018 4:30 AM IST (Updated: 28 Jun 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் அணைகள் வரன்முறைபடுத்துவதற்கான 2–ம் கட்ட சிறப்பு முகாமில் பொதுமக்கள் திரண்டதால் ஊழியர்கள் திணறினார்கள்.

உடுமலை,

உடுமலையில் அணைகள் வரன்முறைபடுத்துவதற்கான 2–ம் கட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதனையொட்டி பொதுமக்கள் காலை 7 மணிக்கே நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். முகாமில் பொதுமக்கள் ஊழியர்களிடையே அதிகமாக திரண்டதால் ஊழியர்கள் திணறினார்கள்.

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் உள்ள தனிமனைகளை (வீட்டுமனைகள்) வரன்முறை படுத்திக்கொள்வதற்கான சிறப்பு முகாம் உடுமலை தளி சாலையில் உள்ள நகராட்சி திருமண்டபத்தில் கடந்த 23–ந்தேதி நடந்தது. அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் பலரை 2–வது கட்டமாக நடைபெறும் சிறப்பு முகாமிற்கு வரும்படி கூறி அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதன்படி 2–ம் கட்ட முகாம் நேற்று அதே மண்டபத்தில் நடந்தது. காலையில் திருமண மண்டப வளாகத்தின் பிரதான நுழைவு வாயில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு காலை 7 மணிக்கே பொதுமக்கள் நீண்ட வரிசையில் அதிக அளவில் காத்திருந்தனர்.

முகாம் காலை 10 மணிக்கு தொடங்கியது. முகாம் தொடங்கியதும் பொதுமக்கள் திருமண மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முதலில் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்கள் வரிசை எண்படி ஒலிபெருக்கி மூலம் அழைக்கப்பட்டு அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அனுமதியற்ற மனைபிரிவுகளில் உள தனிமனைகளை (வீட்டுமனைகள்) வரன்முறைபடுத்துவதற்கான கட்டணத்தொகைக்காக வங்கி வரைவோலையில் தொகை விவரம் எழுதி நிரப்பப்பட்டது.

பின்னர் முகாமில் இருந்த வங்கி அலுவலர்களிடம் அந்தந்த அலுவலக கணக்கில் தொகை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டுமனை வரன்முறைபடுத்தப்பட்ட உத்தரவுகள் உடனடியாக தயாரிக்கப்பட்டு முகாமிலேயே வழங்கப்பட்டன. இந்த முகாமில் 38 ஊராட்சிகளை கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியமான உடுமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மக்கள் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. மொத்தம் 1750–க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

இதில் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது கூடுதலாக நேற்று வந்தவர்கள் மட்டும் சுமார் 650 பேர் ஆவார்கள். 2–ம் கட்ட முகாம்களுக்கு சேர்த்தும் உடுமலை நகராட்சியை பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 230 பேர், மடத்துக்குளம் ஒன்றிய பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 260 பேர். குடிமங்கலம் ஒன்றிய பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 460 டோக்கன் பெற்று வந்திருந்தனர்.

இதில் ஏற்கனவே டோக்கன் பெற்றிருந்தவர்கள் தவிர நேற்று கூடுதலாக வந்திருந்தவர்கள் மட்டும் உடுமலை நகராட்சிப்பகுதியில் 49 பேரும், மடத்துக்குளம் ஒன்றிய பகுதியை சேர்ந்த 97 பேரும், குடிமங்கலம் ஒன்றியப்பகுதியில் 230 பேர் ஆவார்கள்.

நேற்று நடந்த முகாமில் திருமண மண்டபத்திற்குள் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டன. மண்டபத்திற்குள் பணிகள் நடந்து கொண்டிருந்தது. பலர் மண்டபத்தின் கதவு எப்போது திறப்படும் என்று வெளியில் காத்திருந்தனர். கதவு திறக்கப்பட்டதும் அந்த கூட்டமும் திருமண மண்டபத்திற்குள் சென்றதால் மண்டபத்திற்குள் மக்கள் கூட்டம் நிரம்பி அலை மோதியது. இதில் உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் தான் அதிகம்.

திருமண மண்டபத்திற்குள் ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் ஊழியர்கள் திணறினார்கள். ஊழியர்களும் சளைக்காமல் பணிகளை மேற்கொண்டனர். ஆயினும் அனைவருக்கும் மனைகள் வரன்முறைப்படுத்துவதற்கான பணிகளை முடித்து கொடுக்க முடியவில்லை. பல மணிநேரம் காத்திருந்தும் கூட்டம் அதிகமாக இருந்ததால் பணிகள் முடியாததால் பலர் திரும்பி சென்றனர்.

முகாமையொட்டி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் திருமண மண்டபத்திற்கு வெளியே தளி சாலையில் நிறுத்தப்பட்டன. இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளை போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் மேற்கொண்டிருந்தனர்.


Next Story