‘ஜெயலலிதா எந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது’ அப்பல்லோ நர்ஸ் வாக்குமூலத்தால் நீதிபதி ஆறுமுகசாமி அதிர்ச்சி


‘ஜெயலலிதா எந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது’ அப்பல்லோ நர்ஸ் வாக்குமூலத்தால் நீதிபதி ஆறுமுகசாமி அதிர்ச்சி
x
தினத்தந்தி 28 Jun 2018 4:45 AM IST (Updated: 28 Jun 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

‘ஜெயலலிதா எந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது’ என்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த குழுவில் இடம்பெற்றிருந்த அப்பல்லோ மருத்துவமனை நர்ஸ் வாக்குமூலம் அளித்தார். இதைக்கேட்ட நீதிபதி ஆறுமுகசாமி அதிர்ச்சி அடைந்தார்.

சென்னை,

‘ஜெயலலிதா எந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது’ என்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த குழுவில் இடம்பெற்றிருந்த அப்பல்லோ மருத்துவமனை நர்ஸ் வாக்குமூலம் அளித்தார். இதைக்கேட்ட நீதிபதி ஆறுமுகசாமி அதிர்ச்சி அடைந்தார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் நளினி, நர்ஸ் பிரேமா ஆன்டனி ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவர்களிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டார். ஆணையத்தின் வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்தனர். நீதிபதி மற்றும் ஆணைய வக்கீல்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தெரியாது, ஞாபகம் இல்லை என்று அவர்கள் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

மருத்துவர் நளினி, 2016-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி தான் அப்பல்லோ மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அவர் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டில் பல நாட்கள் பணியில் இருந்துள்ளார்.

நான் பணியில் இருந்த போது, ஜெயலலிதா யாரிடமும் பேசியது இல்லை என்றும், ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவில்லை என்றும், தான் வார்டுக்குள் செல்லும் போது சில நேரங்களில் தன்னை பார்த்து ஜெயலலிதா புன்னகைத்து உள்ளதாகவும் நளினி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்த டிசம்பர் 5-ந் தேதி நளினி பணியில் இருந்துள்ளார். ‘அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு மூளையை தவிர மற்ற பிரதான உறுப்புகள் செயல் இழந்துவிட்டன. குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் மூளையும் செயல் இழந்துவிட்டது’ என்றும் தனது வாக்குமூலத்தில் மருத்துவர் நளினி கூறி உள்ளார்.

நர்ஸ் பிரேமா ஆன்டனி, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிறப்பு வார்டில் பணியில் இருந்த செவிலியர்களை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, ஜெயலலிதாவுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு, மருந்து வழங்கப்படுகிறதா?, எந்தெந்த நேரத்தில் என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற மருத்துவக்குறிப்பு சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

விசாரணையின் போது, ஜெயலலிதா என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தனக்கு தெரியாது என்று பிரேமா கூறி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருந்து, சிகிச்சைக்கான மருத்துவக்குறிப்புகளை கண்காணித்து வந்த உங்களுக்கு அவர் என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டார், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? என்பது எப்படி தெரியாமல் இருக்கும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

என்ன நோய்க்காக இந்த மருந்து வழங்கப்பட வேண்டும் என்று தெரிந்தால் தானே, செவிலியர்கள் முறையாக மருந்து வழங்குகிறார்களா? என்பதை நீங்கள் கண்காணிக்க முடியும் என்று பிரேமாவிடம் ஆணையம் தரப்பு வக்கீல்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பிரேமா, ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் பற்றியோ, சிகிச்சை பற்றியோ தெரிந்து கொள்ளவில்லை என்றும், அதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

அவ்வாறு தெரிந்து கொள்ளாததற்கு, ஜெயலலிதா மீது தனிப்பட்ட வெறுப்பா? அல்லது அவரது கட்சி மீது வெறுப்பா? அல்லது அப்பல்லோ நிர்வாகத்தின் மீது வெறுப்பா என அடுத்தடுத்து ஆணைய வக்கீல்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இவை எதுவும் காரணம் இல்லை என்றும், தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

பிரேமாவின் பதில்கள் அனைத்தும் அவர் தானாகவே கூறிய பதில் தானா? அல்லது அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட பதிலா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நர்ஸ் பிரேமாவிடம் மீண்டும் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகத்தின் கணக்கு பிரிவில் அலுவலராக பணியாற்றி வந்த ஆனந்தன் ஆகியோரிடம் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.

Next Story