நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்


நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 28 Jun 2018 4:30 AM IST (Updated: 28 Jun 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சேலம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தும்பிபாடி பகுதியில் கடந்த மாதம் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் அவர் அரசுக்கு எதிராகவும் மேலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடந்த வாரம் நடிகர் மன்சூர் அலிகானை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தனக்கு உடல் நிலை சரியில்லை. தனது மகன்களை கல்லூரியில் சேர்க்க வேண்டும். எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் அந்த உத்தரவில், வழக்கு சம்பந்தமாக விசாரணை அதிகாரி அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உள்ளார். நேற்று மாலை தான் அவருக்கு ஜாமீன் உத்தரவு வழங்கப்பட்டது. இதனால் அவர் நேற்றே ஜெயலில் இருந்து வெளியில் வரமுடியவில்லை. இதன் காரணமாக அவர் இன்று (வியாழக் கிழமை) சிறையில் இருந்து வெளியே வருவார் என்று தெரிகிறது. 

Next Story