ஆதரவற்றோர் இல்லத்தில் மனித கழிவுகளை முதியோர் அள்ளும் வீடியோ வெளியானதால் பரபரப்பு


ஆதரவற்றோர் இல்லத்தில் மனித கழிவுகளை முதியோர் அள்ளும் வீடியோ வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jun 2018 4:30 AM IST (Updated: 28 Jun 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மனித கழிவுகளை முதியோர் அள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆதரவற்றோர் இல்லத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், ஆதரவு இல்லாமல் சாலையில் சுற்றித்திரிந்த முதியவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

இந்தநிலையில், முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்கள், மனித கழிவுகளை அவர்களே கைகளால் அள்ளுவது போன்றும், மேலும், முதியவர்கள் கழிப்பிடத்தை தூய்மைப்படுத்துவது, அங்கு புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட கழிவறையில் முதியவர்கள் தங்கியிருப்பது போன்ற வீடியோ ஒன்று வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சிலர் அனுப்பி வைத்து புகார் தெரிவித்தனர்.

அதன்படி சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் நேற்று அன்னதானப்பட்டியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த முதியவர்களிடம் மனித கழிவுகளை அப்புறப்படுத்தவும், கழிப்பிடத்தை தூய்மை செய்யவும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கட்டாயப்படுத்தினார்களா? என்றும், சித்ரவதை செய்யப்படுகிறீர்களா? என்றும் விசாரித்தனர்.

ஆனால் யாரும் எங்களை வற்புறுத்தி வேலை செய்ய சொல்லவில்லை என்றும், விருப்பத்தின்பேரில் சொந்த சில வேலைகளை செய்து வருவதாகவும் முதியவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முதியோர் இல்லத்தில் இருந்த தொண்டு நிறுவன ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பிரபாகரன் கூறியதாவது:-

சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களை கொடுமை செய்வதாகவும், மனித கழிவுகளை முதியவர்களே அள்ளி தூய்மை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதன்பேரில் அங்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினேன். ஆனால் யாரும் கொடுமைப்படுத்தவில்லை என்று சிலர் தெரிவித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். அவர்கள் எதை செய்கிறோம்? என்று அவர்களுக்கே தெரிவதில்லை.

சிலர் குளித்துவிட்டு அவர்களது துணிகளை துவைக்கிறார்கள். சிலர் கழிப்பறைக்கு சென்று விரும்பத்தகாத செயலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற புகார்கள் வராத வகையில் முதியோர் இல்லத்தை வைத்திருக்க வேண்டும் என்று தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், முதியோர் இல்லத்தில் முதியவர்களை தொண்டு நிறுவன ஊழியர்கள் கொடுமைப்படுத்தினார்களா? என்பது குறித்து அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

Next Story