8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவ - மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவ - மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2018 4:30 AM IST (Updated: 28 Jun 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் - சென்னை, தஞ்சை - மதுரை இடையே 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி வளாக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு மாணவர் இயக்க மாவட்ட தலைவர் பூவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விமல் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும். தமிழகத்துக்குரிய காவிரி நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்று தர வேண்டும். மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். போராடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கைதானவர்களை உடனே விடுதலை செய்து, அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும்.

விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதிக்கக்கூடிய சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். தஞ்சை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் 1 மணிநேரம் நடை பெற்றது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாதி பேர் வகுப்புகளுக்கு மீண்டும் சென்றனர். மீதமுள்ளவர்கள் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். இன்றும்(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர். 

Next Story