முறை தவறிய காதலால் விபரீதம்: ரெயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை


முறை தவறிய காதலால் விபரீதம்: ரெயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2018 4:45 AM IST (Updated: 28 Jun 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே முறை தவறிய காதலால் விபரீத முடிவு எடுத்து ரெயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

ஜீயபுரம்,

திருச்சி அருகே ஜீயபுரம் பக்கம் கடியாக்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியும் காதலித்து வந்தனர். சிறுவன் பிளஸ்-2 படித்து வந்தான். சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இவர்களது காதலை இரு வீட்டாரின் பெற்றோர் எதிர்த்தனர். மேலும் 2 பேரையும் கண்டித்தனர். தூரத்து சொந்தத்தில் இருவரும் அண்ணன்-தங்கை உறவு முறை வரும். அதனால் காதலை கைவிடும்படி அறிவுரை கூறினர். இந்த நிலையில் நேற்று காலை 2 பேரும் பள்ளிக்கு சென்ற பின் மாலையில் பஸ்சில் அல்லூர் மேற்கு தெரு பஸ் நிறுத்தம் அருகே வந்து இறங்கினர். பின்னர் 2 பேரும் கடியாக்குறிச்சி அருகில் உள்ள ரெயில்வே தண்டவாள பாதை அருகே சிமெண்டு கட்டையில் புத்தக பையை வைத்து விட்டு பேசி உள்ளனர்.

காதலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் தற்கொலை செய்யும் முடிவை அவர்கள் எடுத்தனர். வாழ்வில் தான் இணைய முடியவில்லை, ஒன்றாக இணைந்து சாவோம் என்ற முடிவில் இருவரும் கைகோர்த்தப்படி ரெயில் வரும் பாதையை நோக்கி நடந்து சென்றனர்.

அந்த நேரத்தில் ஈரோட்டில் இருந்து திருச்சி நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது அவர்கள் அந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தனர். ரெயில் மோதிய வேகத்தில் 2 பேரின் உடல்கள் துண்டு, துண்டாக சிதறின. உடல் பாகங்கள் ஆங்காங்கே கிடந்தன.

இதற்கிடையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தண்டவாளம் அருகே 2 பேர் உடல் சிதறி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணியன், ரெயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

மேலும் ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசாரும் வந்தனர். இதற்கிடையில் காதல் ஜோடி பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

இந்தநிலையில் சிமெண்டு கட்டை மீது வைத்திருந்த பையில் உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது. அதில்,“நாங்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தோம். அண்ணன்-தங்கை உறவு முறை எனக்கூறி எங்களது காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. சேர்ந்து தான் வாழ முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது முகத்தை யாரும் பார்க்க வேண்டாம்” என்று எழுதி இருந்ததாகவும், அதில் 2 பேரும் கையெழுத்திட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறை தவறிய காதலால் விபரீத முடிவு எடுத்து இளம் காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story