தனிமாநிலம் கோரி ஹாவேரியில் விவசாயிகள் கண்டன ஊர்வலம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது


தனிமாநிலம் கோரி ஹாவேரியில் விவசாயிகள் கண்டன ஊர்வலம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 27 Jun 2018 9:39 PM GMT (Updated: 27 Jun 2018 9:39 PM GMT)

வடகர்நாடகத்துக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்றும், வடகர்நாடகத்தை தனிமாநிலமாக அறிவிக்க கோரியும் வருகிற 2-ந் தேதி ஹாவேரியில் கண்டன ஊர்வலம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் -ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. தென்கர்நாடகத்தை ஒப்பிடுகையில் மாநில அரசு வடகர்நாடகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், வடகர்நாடகத்தில் இருந்து 96 எம்.எல்.ஏ.க்கள் தேர்வாகி உள்ளனர். இதில் பாதி அளவிலான எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இருப்பினும், முதல்-மந்திரியின் குமாரசாமியின் மந்திரி சபையில் வடகர்நாடகத்தை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. வடகர்நாடகத்தில் பிரபலமான தலைவர்களான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எச்.கே.பட்டீல், எம்.பி.பட்டீல், எம்.எல்.சி.யான எஸ்.ஆர்.பட்டீல் ஆகியோருக்கும், ஜனதாளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.சி.யான பசவராஜ் ஹொரட்டி ஆகியோருக்கும் மந்திரி பொறுப்புகள் வழங்காதது வடகர்நாடக பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக வடகர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய பதவிகள் அளிக்காததால் வடகர்நாடக விவசாய சங்கத்தினர் மாநில அரசு மீது கோபம் கொண்டுள்ளனர். இதனால் மாநில அரசை கண்டித்தும், வடகர்நாடகத்தை தனிமாநிலமாக அறிவிக்க கோரியும் வடகர்நாடக விவசாயிகள் ஹாவேரியில் வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) கண்டன ஊர்வலம் நடத்துகிறார்கள்.

இதுகுறித்து, வடகர்நாடக விவசாய சங்க தலைவர் பசவராஜ் ஹரிகார் கூறுகையில், ‘ஹாவேரி மாவட்டத்தில் புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படவில்லை. இதுபோன்ற பிரச்சினைகள் வடகர்நாடகத்தின் பிற மாவட்டங்களில் உள்ளது. விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை. மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. வளர்ச்சி பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை. மாநில அரசு பெங்களூரு மற்றும் தென்கர்நாடகத்தில் மட்டும் வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தியும், மாநில அரசை கண்டித்தும் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி ஹாவேரியில் கண்டன ஊர்வலம் நடத்த உள்ளோம்’ என்றார்.

Next Story