விரதம் இருந்து அத்தி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்தவரால் பரபரப்பு


விரதம் இருந்து அத்தி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jun 2018 3:13 AM IST (Updated: 28 Jun 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஜென்மத்தில் தனக்கு நல்ல மனைவி அமைய வேண்டும் என விரதம் இருந்து அத்தி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெலகாவி,

கர்நாடகத்தில் நேற்று திருமணமான பெண்கள் தங்களது கணவர்கள் நோய்நொடியின்றி நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ வேண்டியும், இளம்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டியும் வடசாவித்திரி விரதம் கடைப்பிடித்து நேற்று அத்திமரத்தில் நூலை சுற்றியும், வளையல்கள் கட்டியும் வலம் வந்து வழிபட்டனர்.

அதே வேளையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஆண் ஒருவர், தனக்கு தற்போதைய மனைவி போல் அடுத்த ஜென்மத்தில் மனைவி அமைய வேண்டாம், அடுத்த ஜென்மத்தில் நல்ல பெண் மனைவியாக வேண்டும் என வேண்டி வடசாவித்திரி விரதம் இருந்து அத்தி மரத்தில் நூலை சுற்றியும், வளையல் கட்டியும் வலம் வந்ததுடன் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார்.

இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பெலகாவி மாவட்டம் சிக்கோடி டவுனில் வசித்து வருபவர் சசீதர். இவருடைய மனைவி சாந்தா. இந்த நிலையில், சாந்தா, தனது கணவர் சசீதருக்கு எதிராக வரதட்சணை கொடுமை புகாரை போலீசில் கூறியுள்ளார். மேலும், அதுதொடர்பாக அவர் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசீதரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், நேற்று சசீதர் அந்த பகுதியில் உள்ள அத்திமரத்தில் நூலை சுற்றி, வளையல் கட்டியதுடன் வலம் வந்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். முன்னதாக, ‘வடசாவித்திரி விரதம்’ இருந்த அவர் சிறப்பு பூஜையின்போது ‘அடுத்த ஜென்மத்தில் எனக்கு சாந்தா மனைவியாக வரவேண்டாம். அடுத்த ஜென்மத்தில் எனக்கு நல்ல மனைவி அமைய வேண்டும்’ என்று வேண்டி கொண்டதோடு, அத்தி மரத்தை சுற்றி நூல் கட்டியும், வளையல் கட்டியும் சிறப்பு பூஜையை நிறைவு செய்தார்.

இதுபற்றி சசீதர் கூறுகையில், ‘என் மீது பொய்யான புகார்களை சாந்தா அளித்துள்ளார். அவர் மீதான வெறுப்பின் காரணமாக அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு மனைவியாக வேண்டாம் என வேண்டி சிறப்பு பூஜை செய்துள்ளேன். எனக்கும், எனது மனைவிக்கும் இடையேயான பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுபற்றி அதிகமாக பேசவிரும்பவில்லை’ என்றார்.

இவ்வாறு சிறப்பு பூஜை செய்து பரபரப்பை ஏற்படுத்திய சசீதர் ஏற்கனவே, தனது மனைவி மீதான வெறுப்பின் காரணமாக ‘மாநிலத்தில் மகளிர் ஆணையத்தை கலைக்க வேண்டும். இல்லையெனில், ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்ததும், தற்போது அவர் ஆண்கள் ஆறுதல் மையம் என்ற பெயரிலான அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சசீதர் அடுத்த ஜென்மத்தில் நல்ல மனைவி அமைய வேண்டி அத்திமரத்துக்கு சிறப்பு பூஜை செய்த நேரத்தில், அவரது மனைவி சாந்தா கண்ணீர்விட்டு கதறி அழுதபடி இருந்தார். அவரை அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினர்.

Next Story