காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும்: சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாவிட்டால்  புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும்: சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jun 2018 5:15 AM IST (Updated: 28 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாவிட்டால், புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை,

காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாவிட்டால், புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சட்டசபையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தொடர்ந்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார்.

அப்போது அவர், “முதல்-அமைச்சர் தனது பதிலுரையில் திட்டங்களை பற்றி கூறும்போது முடியும்.. முடியும்.. என்று கூறினார். முடிந்தது.. முடிந்தது.. என்று கூறியிருந்தால் நாங்களும் வரவேற்றிருப்போம். தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்-அமைச்சர் இங்கே குறிப்பிட்டார். நான் நேற்று பேசும்போது, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையை வைத்துத்தான் பேசினேன். முதலில், புகார் மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். ஏனென்றால், காவல் நிலையங்களில் புகார் அளிக்க சென்றால், வழக்கு பதிவு செய்ய மறுக்கிறார்கள். நீதிமன்றம் சென்று வழக்குப்பதிவு செய்யும் நிலை உள்ளது. எனவே, இலவச தொலைபேசி எண் ஒன்றை அறிவிக்க வேண்டும். புகாரின் மீது வழக்குப்பதிவு (எப்.ஐ.ஆர்.) செய்ய போலீசார் மறுத்தால், இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்த பிறகு, குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தது என்று சொன்னால், நாங்களும் வரவேற்போம்” என்றார்.

அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இப்போது காவல் நிலையம் சென்றுதான் புகார் அளிக்க வேண்டும் என்று இல்லை. ஆன்லைன் மூலமே புகார் அளிக்கலாம். அந்த வகையில் அதிக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.



Next Story