அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 28 Jun 2018 4:45 AM IST (Updated: 28 Jun 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் எப்போது செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமக விளங்குவது கோடநாடு பகுதியிலுள்ள ஈளாடா தடுப்பணை. இந்த நிலையில் கோத்தகிரி நகரில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாகவும், நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணை கோடை காலங்களில் வறண்டு விடுவதாலும் கோத்தகிரி பகுதியில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு முறை தலா 40 லட்சம் ரூபாய் செலவில் ஈளாடா தடுப்பணை து£ர்வாரப்பட்டதுடன் பக்கவாட்டு சுவர்களும் கட்டி முடிக்கப்பட்டு முன்பிருந்ததை விட இரண்டு மடங்கு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தடுப்பணை 90 மீட்டர் நீளமும் 66 மீட்டர் அகலமும் சராசரியாக 12 அடி உயரத்துடனும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மழை காரணமாக ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதுடன் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களின் தண்ணீர் தேவையை முற்றிலுமாக பூர்த்தி செய்ய அளக்கரை கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டுவரப்பட்டது. இதற்காக 10 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டத்திற்கான கடன் தொகையை கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டியிருந்த நிலையில், அப்போதைய தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா முழு தொகையையும் மானியமாக அறிவித்து உத்தரவிட்டதுடன் தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்று கொள்வதாக அறிவித்தார். இத்திட்டத்திற்க்காக அளக்கரை பகுதியில் செல்லும் ஓடையை தடுத்து தரைமட்ட பிரமாண்ட நீர் தேக்கத் தொட்டி அமைத்து அங்கிருந்து கோத்தகிரி வரை பெரிய இரும்பு, குழாய்கள் பதிக்கப்பட்டதுடன் தாழ்வான இடங்களிலிருந்து தண்ணீரை உந்துவதற்காக 7 இடங்களில் நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் மோட்டார் அறைகள் அமைக்கப்பட்டன.

மேலும் இந்த திட்டத்தில் நகரின் உயரமான சக்திமலை பகுதியில் ஒரு ‘மெகா‘ நீர்சேகரிப்பு தொட்டி, ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நீர்தேக்கத் தொட்டி, மற்றும் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு, தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்ததுடன் விரைவில் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டனர். இதனையடுத்து 2–வது குடிநீர் சுத்திகரிப்பு நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்காக நிலத்தை சமன் படுத்தும் பணி நடைப்பெறுவதுடன் தடுப்புச் சுவர்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கட்டி முடிக்கப்பட்டுள்ள முதலாவது சுத்திகரிப்பு நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குழாய்களை இணைத்து நேரு பூங்கா அருகில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான நீர் உந்து நிலையத்திற்கு குழாய்களை இணைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த குடிநீர் திட்டப்பணிகள் 95 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. ஆகவே திட்டப்பணிகள் எப்போது முடியும். குடிநீர் வினியோகம் எப்போது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், அளக்கரை குடிநீர் திட்ட பணிகள் முற்றிலுமாக நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மேலும் சில மாதங்கள் தேவைபட்டாலும் தற்காலிகமாக இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீரை வினியோகம் செய்ய வெள்ளோட்டம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக அளக்கரையிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் சக்திமலை குடிநீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு முதல் சுத்திகரிப்பு நிலைய தொட்டியிலிருந்து ராம்சந்த் சதுக்கம் பகுதியிலுள்ள பேரூராட்சிக்கு சொந்தமான நீர் உந்து நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது:–

தற்போது கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளுக்கு தினமும் 2 இலட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குடியிருப்புகள் அதிகமாக உள்ளதாலும், போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததாலும் சுழற்சிமுறையில் ஒவ்வொரு பகுதிக்கும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அளக்கரை குடிநீர் திட்டத்தின் மூலம் 8 இலட்சம் லிட்டர் கூடுதலாக தண்ணீர் கிடைப்பதால் குடிநீர் இணைப்புக்களின் எண்ணிக்கையை அதிகரித்து தினந்தோறும் குடிநீரை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் கோத்தகிரி நகர் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலுமாக நிவர்த்தி செய்யப்படும்.

மேலும் கூடுதல் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு முறையாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்கனவே உள்ள பழைய, சிறிய அளவிலான குழாய்கள் போதுமானதாக இல்லாததால் ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள நீர்உந்து நிலையம் முதல் நகரின் முக்கிய சந்திப்புப் பகுதிகளுக்கு பெரிய குழாய்கள் அமைத்து குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் கேட் வால்வுகள் அமைத்து முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சென்னையிலிருந்து சிறப்பு பொறியாளர்களை வரவழைத்து முறையாக ஆய்வு செய்து ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த சுமார் 2 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் இதற்காக புதிய திட்டம் தீட்டப்பட்டு ஆயத்தப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story