நீட் தேர்வு முடிவு தர வரிசைப்பட்டியல் இப்போதைக்கு வெளியிட மாட்டோம், மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்


நீட் தேர்வு முடிவு தர வரிசைப்பட்டியல் இப்போதைக்கு வெளியிட மாட்டோம், மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 28 Jun 2018 4:45 AM IST (Updated: 28 Jun 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு முடிவு தர வரிசைப்பட்டியலை இப்போதைக்கு வெளியிட மாட்டோம் என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வை 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து எழுதினார்கள். தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, ‘‘நீட் தேர்வு தமிழ்மொழி வினாத்தாளில் குளறுபடி உள்ளது. ஆனால் ஆங்கில வினாத்தாள் தான் இறுதியானது. அகில இந்திய அளவில் நீட் தரவரிசை வெளியிடப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தர வரிசைப்பட்டியலை மாநில அரசு தான் வெளியிட வேண்டும்’’ என்று வாதாடினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘தமிழ்மொழி வினாத்தாள் குளறுபடி குறித்து தேர்வு நடந்த உடனேயே புகார் செய்தோம். தவறு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆங்கிலமொழியில் தேர்வை எழுத முடியாமல் தான் மாணவர்கள் பலர் தமிழ் வழித் தேர்வை தேர்ந்தெடுத்தனர். ஆனால் அதிலும் குளறுபடி இருந்ததால் அவர்கள் குறைவான மதிப்பெண் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தற்போது மாநில தர வரிசைப்பட்டியல் வெளியிடக்கூடாது’’ என்று வாதாடினார்.

இதையடுத்து ‘‘தமிழகத்தில் தர வரிசைப்பட்டியலை தற்போதைக்கு அரசு வெளியிடாது’’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.


Next Story