மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவுப்பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவுப்பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Jun 2018 4:35 AM IST (Updated: 28 Jun 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவு ப்பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பதிலளிக்க அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியில் இருந்து உணவுப்பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

தனிநபர் ஒருவர் தனது உணவுப்பொருட்களை திரையரங்குக்குள் எடுத்து செல்ல தடை விதிப்பதற்கு சட்ட ரீதியில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை என அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சித் மோரே மற்றும் அனுஜா பிரபு தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டே திரையரங்குக்குள் உணவுப்பொருட்கள் எடுத்துவர அனுமதி அளிப்பதில்லை என கூறினார். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்து திரையங்குகளிலும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவுப்பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குறிப்பிட்டனர். மேலும் பொதுமக்கள் வெளியில் இருந்து உணவுப்பொருட்களை எடுத்துவர அனுமதி மறுக்கப்படுகையில், திரையரங்குக்குள் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையை அரசு முறைபடுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து இன்னும் 4 வாரங்களில் இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Next Story