கோடீஸ்வர யாசகர்கள்!


கோடீஸ்வர யாசகர்கள்!
x
தினத்தந்தி 29 Jun 2018 4:15 AM IST (Updated: 28 Jun 2018 11:49 AM IST)
t-max-icont-min-icon

துபாய்யில் யாசகம் கேட்பவர்கள் கூட மாதத்துக்கு 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

துபாய் பணக்கார நகரம். இங்கே யாசகம் கேட்பவர்கள் கூட மாதத்துக்கு சுமார் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது. துபாயில் யாசகம் கேட்பது சட்டப்படி குற்றம். ஆனால் அதையும் மீறி, அங்கே யாசகம் கேட்கப்படுகிறது. அவர்கள் சாதாரணமான யாசகர்கள் இல்லையாம், தொழில்முறை யாசகர்களாம். ஆம்..! இதற்காகவே வெளிநாடுகளில் இருந்து 3 மாத விசாவோடு துபாய்க்கு வருகிறார்கள். மிக நாகரிகமாக உடை அணிகிறார்கள். பார்ப்பதற்குப் பணக்காரர்கள் போலவே தோற்றம் அளிக்கிறார்கள். இவர்கள் கண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் யாசகம் கேட்பதில்லை. பணக்காரர்களிடம் மட்டுமே கேட்பார்கள். ‘‘நான் பணக்காரன். கையில் இருந்த பணமும் வங்கி அட்டைகளும் திருடப்பட்டு விட்டன. என் உறவினர் மயங்கிக் கிடக்கிறார். என் பாஸ்போட் தொலைந்துவிட்டது..’’ இப்படி ஏதாவது ஒரு கதையை நெஞ்சை உருக்கும் விதத்தில் சொல்லி 17 ஆயிரம் ரூபாயை உதவியாகக் கேட்பார்களாம். துபாய் செல்வந்தர்களுக்கு இது ஒரு பெரிய தொகை இல்லை என்பதால், கொடுத்துவிடுகிறார்கள். அதுவும் மசூதி வாசலில் யாசகம் கேட்டால், கேள்வி கேட்காமல் கேட்ட தொகை கிடைத்துவிடுமாம். அரை மணி நேரத்தில் 20 ஆயிரம் ரூபாயைச் சம்பாதிப்பதோடு, ஒரு மாதத்தில் 48 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். மூன்று மாதங்களில் பணம் சேர்ந்தவுடன் துபாயிலிருந்து கிளம்பிவிடுகிறார்கள். பணம் செலவான பிறகு, மீண்டும் துபாய் நோக்கி வருகிறார்கள். 

Next Story