அழகான, வயதான மாடல்..!
வயதானவள் என்பதால் இதை அணியாதே, அதைச் செய்யாதே என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்கிறார் லின் ஸ்லேட்டர்.
அமெரிக்காவில் வசிக்கும் லின் ஸ்லேட்டர், பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் பேஷன் ஷோவில் ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். அந்த சமயம் உணவு இடைவேளை நேரமாக இருந்ததால் அவரை வெளியில் காத்திருக்கச் சொன்னார்கள். அப்போது இரண்டு ஜப்பானிய பத்திரிகையாளர்கள், லின்னிடம் சில கேள்விகளைக் கேட்டனர். புகைப்படங்களும் எடுத்தனர். அவர்கள் ஏன் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது லின்னினுக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. அவரின் நளினமான உடை, கைப்பை, அலங்காரம் போன்றவற்றை பார்த்து மாடல் அழகி என்று தவறாக நினைத்துவிட்டனர்.
“ஜப்பானியர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே என்னைச் சுற்றிப் பெருங்கூட்டம் கூடிவிட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. பேஷன் உலகில் நான் மிக முக்கியமான நபர் என்று நினைத்திருக்கிறார்கள். எனக்கு விஷயம் புரிவதற்குள் பல்வேறு கேமராக்களில் படங்களை எடுத்துத் தள்ளி விட்டனர். இப்படித்தான் பேஷன் துறைக்குள் எதிர்பாராமல் நுழைந்தேன். ஜனவரியில் எலைட் லண்டன் நிறுவனம் என்னுடைய ஸ்டைலை பார்த்து மாடலிங் வாய்ப்பு வழங்கியது. அதற்குப் பிறகு பல சர்வதேச நிறுவனங்களிடம் மாடலாக பணியாற்றிவிட்டேன்.
வயதானவள் என்பதால் இதை அணியாதே, அதைச் செய்யாதே என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டேன். எனக்கு எது வசதியாகத் தோன்றுகிறதோ, நான் எதை அழகாக நினைக்கிறேனோ அப்படித்தான் ஆடைகளை அணிவேன், அலங்காரம் செய்துகொள்வேன். வயது ஒரு நாளும் என் முடிவுகளுக்கு தடையாக இருக்க முடியாது. புதிய ஆடைகளை உருவாக்கி அணியும் ஒவ்வொரு முறையும் மிக இளமையாக உணர்கிறேன்” என்கிறார் லின் ஸ்லேட்டர்.
Related Tags :
Next Story