சேகுவேரா படம் பொறித்த பனியன் அணிந்தவர் பணிநீக்கம்!
புரட்சியாளர் சேகுவேரா படம் பொறித்த ‘டீ-சர்ட்’ அணிந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஸ்பென்சர் ரபோன் எனும் அந்த 26 வயது ராணுவ வீரர் முறையற்ற செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்த நடவடிக்கைக்கு உள்ளாகி யிருக்கிறார்.
நியூயார்க் மாநிலத்தில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் ரபோன் தனது பயிற்சியை முடித்ததும் கம்யூனிசத்துக்கு ஆதரவான புகைப்படங்களைப் பகிர்ந்திருந்ததால், ராணுவம் அவர் மீது விசாரணையைத் தொடங்கியது.
அதில், ரபோனின் ‘குற்றம்’ நிரூபணம் ஆனதால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீண்டும் ராணுவத்தில் இணையவோ, முன்னாள் ராணுவத்தினருக்கான சலுகைகளைப் பெறவோ முடியாமல் போகலாம்.
தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் தான் செய்த செயலுக்கு வருத்தப்படாத ரபோன், போர்ட் டிரம் ராணுவக் குடியிருப்பின் முகப்பின் முன் நிற்கும் தனது படத்துடன், ‘ஓர் இறுதி வணக்கம்’ என்று தலைப்பிட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு, வெஸ்ட் பாய்ன்ட் மையத்தில் ராணுவப் பயிற்சியை முடித்தபின், ‘கம்யூனிசம் வெற்றிபெறும்’ என்று தனது தொப்பியில் எழுதி அதன் படத்தை ரபோன் வெளியிட்டிருந்தது சர்ச்சையை உண்டாக்கியது.
இன்னொரு படத்தில் கியூபப் புரட்சியாளரான சேகுவேராவின் படம் பொறித்த டீ-சர்ட்டை ரபோன் அணிந்திருந்தார்.
இதுதொடர்பான விசாரணை முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவம், அந்தரங்க உரிமைச் சட்டங்களின் கட்டுப்பாட்டால் கூடுதல் தகவல்களை தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளது.
ஸ்பென்சர் ரபோன் தம்மை ஒரு ‘புரட்சிகர சோசலிச வாதி’ எனக் கருதுவதாகக் கூறுகிறார். சிகாகோ நகரில் நடக்கும் ‘சோசலிசம் 2018 ’ மாநாட்டிலும் அவர் பேசவிருக்கிறார்.
மறைந்த பல காலத்துக்குப் பின்னும் அமெரிக்காவில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறார், சேகுவேரா!
Related Tags :
Next Story