ஆழ்வார்திருநகரியில் பரபரப்பு பள்ளிக்கூட மேற்கூரை சரிந்து விழுந்து மாணவர்கள் உள்பட 5 பேர் காயம்


ஆழ்வார்திருநகரியில் பரபரப்பு பள்ளிக்கூட மேற்கூரை சரிந்து விழுந்து மாணவர்கள் உள்பட 5 பேர் காயம்
x
தினத்தந்தி 29 Jun 2018 3:30 AM IST (Updated: 28 Jun 2018 7:03 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரியில் பள்ளிக்கூட மேற்கூரை சரிந்து விழுந்து 3 மாணவர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

தென்திருப்பேரை, 

ஆழ்வார்திருநகரியில் பள்ளிக்கூட மேற்கூரை சரிந்து விழுந்து 3 மாணவர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடங்கள் 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காசுக்கடை தெருவில் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. அரசு உதவிபெறும் இந்த பள்ளிக்கூடத்தில் 36 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

இந்த பள்ளிக்கூடம் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை மற்றொரு கட்டிடத்திலும் செயல்படுகிறது. ஓட்டு மேற்கூரைகளால் ஆன இந்த 2 கட்டிடங்களும் பழுதடைந்த நிலையில் இருந்தன.

மேற்கூரை சரிந்து விழுந்து... 

இந்த நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் வழக்கம்போல் மாணவ–மாணவிகள் பள்ளிக்கூடத்தில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். அப்போது 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் முழுவதும் திடீரென்று சரிந்து விழுந்தன. இதனால் மாணவ–மாணவிகள் அலறியடித்தவாறு வெளியே ஓடினர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய ஆழ்வார்திருநகரி மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்த தங்கமணி மகன் மணிகண்டன் (வயது 8), வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சூரியபாண்டியன் மகன் ஆறுமுகம் (7), மேட்டு தெருவைச் சேர்ந்த சங்கர் மகள் கலைச்செல்வி (7), ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி பார்வதி (45), ஏஞ்சலின் (51) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கூடத்துக்கு பதறியடித்து ஓடினர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆழ்வார்திருநகரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம் அடைந்த மணிகண்டன், ஆறுமுகம், கலைச்செல்வி, பார்வதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மணிகண்டன் 3–ம் வகுப்பும், ஆறுமுகம், கலைச்செல்வி ஆகியோர் 2–ம் வகுப்பும் படித்து வருகின்றனர். காயம் அடைந்த பார்வதி மழலையர் பிரிவில் தற்காலிக ஆசிரியையாகவும், ஏஞ்சலின் 1–ம் வகுப்பு ஆசிரியையாகவும் உள்ளனர்.

உதவி கலெக்டர் ஆய்வு 

மேற்கூரை சரிந்து விழுந்த பள்ளிக்கூடத்தை திருச்செந்தூர் உதவி கலெக்டர் தங்கவேலு, தாசில்தார் தில்லைப்பாண்டி, வட்டார கல்வி அலுவலர் ரோஸ்லின் ராஜம்மாள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அங்கு 6 முதல் 8–ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் கட்டிடமும் பழுதடைந்த நிலையில் இருந்தது. எனவே அந்த மாணவர்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக்கூடத்தின் மேற்கூரை தென்பகுதியில் சரிய தொடங்கியதும், வடபுறத்தில் உள்ள 2 வாசல்கள் வழியாக பெரும்பாலான மாணவ–மாணவிகள் வெளியே ஓடி வந்து விட்டனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கூட மேற்கூரை சரிந்து விழுந்து மாணவர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story