கோவை விமான நிலையத்தில் ரூ.6 கோடியில் கூடுதல் வசதிகள்


கோவை விமான நிலையத்தில் ரூ.6 கோடியில் கூடுதல் வசதிகள்
x
தினத்தந்தி 29 Jun 2018 3:15 AM IST (Updated: 28 Jun 2018 10:54 PM IST)
t-max-icont-min-icon

கோவை விமான நிலையத்தில் ரூ.6 கோடியில் கூடுதல் வசதிகள் செய்யப்பட உள்ளன.

கோவை,

கோவை விமான நிலையத்தில் ரூ.6 கோடியில் கூடுதல் வசதிகள் செய்யப்பட உள்ளன.

கோவை விமான நிலையத்தில் தினமும் 34 விமானங்கள் வந்து செல்கின்றன. சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அடிக்கடி விமான சேவைகள் உள்ளன. இங்கு 6 விமானங்கள் வந்து நிற்பதற்கு வசதிகள் இருந்தாலும் விமானத்தோடு இணைக்கும் நகரும் பாலம் என்ற ஏரோ பிரிட்ஜ் இரண்டு தான் உள்ளன. எனவே ஒரே நேரத்தில் 3 அல்லது 4 விமானங்கள் வந்து விட்டால் அதில் 2 விமானங்கள் தான் ஏரோ பிரிட்ஜ் உடன் இணைக்கப்படும். விமானத்தில் உள்ள பயணிகள் படிக்கட்டு வழியாக நடந்து கீழே இறங்கி வராமல் நேராக விமானத்தில் இருந்தவாறு விமான நிலையத்துக்குள் வந்து விடலாம். இத்தகைய ஏரோ பிரிட்ஜ் விமானம் வந்து நின்றவுடன் அதன் கதவுடன் இணைக்கப்படும். அதன் வழியாக பயணிகள் நேரே நடந்து விமான நிலையத்துக்குள் வந்து விடலாம். அல்லது பாதுகாப்பு சோதனை முடிந்த உடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் இருந்தவாறு நேரே விமானத்துக்குள் சென்று அமர்ந்து விடலாம்.

ஏரோபிரிட்ஜ் உடன் இணைக்கப்படாத விமானங்களில் இருந்து பயணிகள் படிக்கட்டுகள் வழியாக இறங்கி நடந்து தான் விமான நிலையத்துக்குள் வரவேண்டும். நடக்க முடியாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட, வயதான பயணிகள் ஏரோபிரிட்ஜ் இருந்தால் அதன் வழியாக எளிதில் சக்கர நாற்காலியில் வந்து விடுவார்கள்.

ஆனால் ஏரோ பிரிட்ஜ் இல்லை என்றால் சக்கர நாற்காலியில் வரும் பயணிகளை விமான நிறுவன ஊழியர்கள் படிக்கட்டு வழியாக தூக்கி தான் வர வேண்டும். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இதற்காகவே நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வரும் பயணிகள் விமான பயணத்தை விரும்பாமல் ரெயில் அல்லது கார் பயணத்தை விரும்புகிறார்கள். விமான பயணிகளின் இத்தகைய சிரமத்தை தவிர்க்க கோவை விமான நிலையத்தில் மேலும் 2 ஏரோ பிரிட்ஜ்கள் அமைக்கப்பட உள்ளன.

இது குறித்து கோவை விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் கூறியதாவது:-

கோவை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ரூ.6 கோடி செலவில் கூடுதலாக 2 ஏரோ பிரிட்ஜ்கள் வருகிற அக்டோபர் மாதம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை வந்த உடன் அவற்றை நிர்மாணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கோவை விமான நிலையத் தில் ஏரோபிரிட்ஜ்களின் எண்ணிக்கை 4 ஆக உயரும். அதன்பின்னர் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 விமானங்கள் வந்தாலும் பயணிகள் எந்தவித சிரமும் இன்றி ஏரோபிரிட்ஜ் மூலம் விமான நிலையம் வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story