கோவை பேரூரில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு


கோவை பேரூரில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2018 3:45 AM IST (Updated: 28 Jun 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

கோவை பேரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது.

பேரூர்,

கோவை பேரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகள் திருட்டு போவதை தடுக்க பேரூர் பட்டீசுவரர் கோவில் அருகே உள்ள அரசம்பலவாணர் கோவிலில் இந்து அறநிலைய துறை சார்பில் சிலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 143 சாமி சிலைகள் வைத்து பாதுகாக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு கோவில்களில் இருந்து 26 சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது குறித்து இந்து சமய அறநிலையதுறை அதிகாரி கூறியதாவது:-

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏராளமான சாமி சிலைகள் உள்ளன. அவை திருட்டு போவதை தடுக்க இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பேரூரில் கடந்த 2009-ம் ஆண்டு சிலைகள் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது. இங்கு தற்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் இருந்து மொத்தம் 143 சாமி சிலைகள் வைத்து பாதுகாக்கப்படு கிறது.

பாதுகாப்பை பலப்படுத்த 12 கண்காணிப்பு கேமராக்கள், அபாய அலாரம் மற்றும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மையத்துக்கு சிலைகளை அனுப்ப விருப்பம் உள்ள கோவில் நிர்வாகிகள், சென்னையில் உள்ள இந்துசமய அறநிலையதுறை அலுவலகத்தில் சிலைகளை அனுப்புவதற்காக உரிய அனுமதியை பெற வேண்டும். அதன் பின்னர் சிலைகளை பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வரவேண்டும்.

நாங்கள் சிலைகளை 4 கோணங்களில் புகைப்படம் எடுத்தும், எடை, உயரம் ஆகியவற்றை சரிபார்த்து அதன் பின்னர் பாதுகாப்பு மையத்தில் வைப்போம். கோவில் திருவிழா, மற்றும் முக்கியமான பூஜை நேரங்களில் கோவில் நிர்வாகிகள் இங்கு வந்து சிலைகளை எடுத்து செல்லலாம்.

தற்போது இதே போல திருப்பூர் மாவட்டம் சிவன்மலை, ஈரோடு மாவட்டம் சோழீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் சிலை பாதுகாப்பு மையம் தொடங்கப்பட் டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story