மதுரையில் அடுத்தடுத்து விபத்து மின்வாரிய என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி


மதுரையில் அடுத்தடுத்து விபத்து மின்வாரிய என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 29 Jun 2018 4:45 AM IST (Updated: 29 Jun 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நடந்த வெவ்வேறு வாகன விபத்துகளில் மின்வாரிய என்ஜினீயர் உள்பட 3 பேர் இறந்தனர்.

மதுரை,

மதுரையில் நடந்த வெவ்வேறு வாகன விபத்துகளில் மின்வாரிய என்ஜினீயர் உள்பட 3 பேர் இறந்தனர்.

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி(வயது 40). இவர் நெல்லை மின்வாரியத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் எல்லீஸ்நகர் பாலம் இறக்கத்தில் பெரியார் பஸ் நிலையம் நோக்கி சென்றார். அப்போது லாரி ஒன்று அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்தது. திடீரென்று லாரியில் பிரேக் பிடிக்கவில்லை. எனவே எதிர்பாராதவிதமாக லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அழகர்சாமி இறந்தார். விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உசிலம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கணேசனை(27) விசாரித்து வருகிறார்கள்.

மதுரை காக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(40), அ.தி.மு.க. பிரமுகர். இவர் மொபட்டில் எல்லீஸ்நகர் 70 அடி ரோட்டில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள தெருவில் இருந்து மெயின்ரோட்டில் திரும்பினார். அப்போது அவர் எதிரே வந்த டவுன் பஸ் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே சீனிவாசன் இறந்தார். தலைகவசம் அணிந்திருந்தால் அவர் உயிர் தப்பியிருக்கலாம் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் ஜீவானந்தம்(39). இவர் மோட்டார் சைக்கிளில் மேலூர்-உத்தங்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Next Story