திருப்பூரில் ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தி கொடூர கொலை: கைது செய்யப்பட்ட 4 பேர் சிறையில் அடைப்பு


திருப்பூரில் ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தி கொடூர கொலை: கைது செய்யப்பட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 29 Jun 2018 5:00 AM IST (Updated: 29 Jun 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ப.சிதம்பரத்தின் உறவினரை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் கைதான 4 பேரையும் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தன

=திருப்பூர்,

திருப்பூரில் ப.சிதம்பரத்தின் உறவினரை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் கைதான 4 பேரையும் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி(வயது 47). இவர் திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி துர்கா வைஷ்ணவி. இவர்களுக்கு 5 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். துர்கா வைஷ்ணவி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின், சகோதரியான பத்மினியின் மகள் ஆவார்.

இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி காலை 11 மணி அளவில் சிவமூர்த்தி கோவை செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து தனது காரில் புறப்பட்டார். அதன் பின்னர் அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. மேலும் அவருடைய 3 செல்போன்களும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து சிவமூர்த்தியின் தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

சிவமூர்த்தியின் கார் பதிவு எண் தமிழகம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அந்த கார் கிருஷ்ணகிரி மற்றும் வாணியம்பாடி சோதனை சாவடி வழியாக கடந்து சென்றது கண்டறியப்பட்டது. இது குறித்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் போலீசாருக்கு திருப்பூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வெங்கிளி என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை வழிமறித்தனர். மேலும், அதில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் காரமடை அருகே தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த கவுதமன், மணிபாரதி, விமல் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவமூர்த்தியை கொலை செய்து ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் வீசியதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் கெலவரப்பள்ளி சென்று அணையில் வீசப்பட்ட சிவமூர்த்தியின் உடலை மீட்டனர். இது தொடர்பாக விமல்(35), கவுதமன்(22), மணிபாரதி(22) ஆகியோரையும், இந்த கொலையில் தொடர்புடையதாக காரமடையை சேர்ந்த மூர்த்தி(35) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் 4 பேரையும் திருப்பூர் அழைத்து வந்த போலீசார் விடிய, விடிய அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் கவுதமன், மணிபாரதி, விமல் ஆகியோரை திருப்பூர் ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் நேற்று மதியம் 1.30 மணி அளவில் வாகனத்தில் அழைத்து வந்தனர். ஆனால் கோர்ட்டு வளாகத்தில் சுமார் 2 மணி நேரம் 3 பேரையும் வைத்திருந்து மீண்டும் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து 3 பேருடன் மூர்த்தியையும் சேர்த்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

பின்னர் மாலை 5.30 மணியளவில் மேற்கண்ட 4 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் அடுத்த மாதம்(ஜூலை) 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து விமல், கவுதமன், மணிபாரதி, மூர்த்தி ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுகின்றனர் என்ற செய்தி அறிந்ததும் சிவமூர்த்தியின் நண்பர்கள் உள்பட ஏராளமானோர் நேற்று மதியம் முதல் திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் குவிந்தனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாகவே காணப்பட்டது.

Next Story