ரூ.2 கோடி கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக நடந்த கொலை: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


ரூ.2 கோடி கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக நடந்த கொலை: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 29 Jun 2018 5:00 AM IST (Updated: 29 Jun 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 கோடி கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே திருப்பூரில், தொழில் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூர்,

ரூ.2 கோடி கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே திருப்பூரில், தொழில் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூரில், விமல் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர்களை கொடுக்கும் பையிங் ஏஜெண்ட் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது அவருக்கு ரூ.2 கோடிக்கு கடன் ஏற்பட்டுள்ளது. கடன் பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதமாக மிகுந்த சிரமத்துடன் இருந்து வந்த விமல் திருப்பூரில் இருந்து கோவைக்கு சென்று விட்டார். வங்கிகள் நெருக்கடி கொடுக்க, கொடுக்க விமல் பணத்தேவைக்காக பலரிடம் உதவி கேட்டுள்ளார்.

தொழில் அதிபர் சிவமூர்த்திக்கும், விமலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இருவரும் சேர்ந்து வெளியூருக்கு சுற்றுலா சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இதனால் சிவமூர்த்தியிடம் பண உதவி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சிவமூர்த்தியின் தனிப்பட்ட விஷயங்கள் பலவற்றை விமல் அறிந்து வைத்துள்ளார். இதனால் சிவமூர்த்தியை நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சொகுசு பங்களாவுக்கு சென்று தங்கலாம் என்று கூறி திட்டமிட்டு விமல் அழைத்துள்ளார். அதை நம்பியே சிவமூர்த்தியும் சென்றுள்ளார். அப்படி சென்ற இடத்தில் தான் விமல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிவமூர்த்தியிடம் ரூ.50 லட்சம் வரை கேட்டு மிரட்ட திட்டமிட்டுள்ளார்.

இதற்கு சேத்துமடையை சேர்ந்த மூர்த்தியின் உதவியை நாடியுள்ளார். மூர்த்தி மீது ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதனால் மூர்த்தியும் தனது கூட்டாளிகளுடன் காத்திருந்து சிவமூர்த்தியின் காரில் ஏறியுள்ளார். காரின் முன் இருக்கையில் விமல் அமர, மற்ற 3 பேரும் பின் இருக்கையில் இருந்துள்ளனர். சிவமூர்த்தி காரை ஓட்டியுள்ளார். பின் இருக்கையில் இருந்த 3 பேரும் திடீரென்று சிவமூர்த்தியை தாக்கி பணம் கேட்டு மிரட்டியதும், அவர் கூச்சல் போட, அட்டைப்பெட்டிகள் ஒட்ட பயன்படுத்தும் டேப்பை எடுத்து சிவமூர்த்தியின் வாய், முகம் முழுவதும் சுற்றியுள்ளனர்.

மேலும் காரில் இருந்து அவரை கீழே இழுத்துப்போட்டு தாக்கியுள்ளனர். அதில் மூச்சுத்திணறி சிவமூர்த்தி இறந்துள்ளதாக தெரிகிறது. திட்டம் தோல்வியில் முடிந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் பிணத்துடன் 2 நாட்கள் காரில் சுற்றி விட்டு கெலவரப்பள்ளி அணையில் வீசியுள்ளனர். சிவமூர்த்தியின் உடலில் வேறு காயங்கள் எதுவும் இல்லை. ரூ.2 கோடி கடன் பிரச்சினையை தீர்க்க, பணம் பறிக்கும் நோக்கத்தில் நடந்த கடத்தல் சம்பவம் கடைசியில் கொலை வரை சென்று விட்டது.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story