சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் நிர்மலா தேவிக்கு 3 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை: இன்று மீண்டும் மதுரை அழைத்துச் செல்லப்படுகிறார்


சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் நிர்மலா தேவிக்கு 3 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை: இன்று மீண்டும் மதுரை அழைத்துச் செல்லப்படுகிறார்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:15 AM IST (Updated: 29 Jun 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் நிர்மலா தேவிக்கு 3½ மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் இன்று(வெள்ளிக் கிழமை) மதுரை அழைத்துச் செல்லப்படுகிறார்.

சென்னை,

சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் நிர்மலா தேவிக்கு 3½ மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் இன்று(வெள்ளிக் கிழமை) மதுரை அழைத்துச் செல்லப்படுகிறார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை, செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த செல்போன் உரையாடல் குறித்து சென்னையில் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜூன் 27, 28, 29-ந் தேதி ஆகிய 3 நாட்கள் அனுமதி பெற்றனர்.

இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவி நேற்றுமுன்தினம் சென்னை அழைத்து வரப்பட்டு, இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் குரல் மாதிரி பரிசோதனைக்காக புழல் சிறையில் இருந்து சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள தடய அறிவியல் அலுவலகத்துக்கு நிர்மலாதேவி பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 10.25 மணியளவில் அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவருக்கு தடய அறிவியல்(இயற்பியல்) துணை இயக்குனர் ஹேமலதா, உதவி இயக்குனர் நளினி நடராஜன் ஆகியோரது முன்னிலையில் காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த செல்போன் உரையாடலில் பேசிய வாசகங்களை பேப்பரில் எழுதி படித்தல், அதிக சத்தத்துடன் பேசுதல், மெதுவாக பேசுதல், வாயை மட்டும் அசைத்தல், சில கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளித்தல் என 5 கட்டங்களாக நிர்மலா தேவியிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவருடைய பேச்சுக்கள் சி.டி.யில் (குறுந்தகடு) பதிவு செய்யப்பட்டது.

சோதனைக்கு பின்னர் நிர்மலா தேவி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று(வெள்ளிக் கிழமை) காலை அவர் புழல் சிறையில் இருந்து மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த செல்போன் உரையாடலுடன், தற்போது அவர் பேசிய உரையாடலையும் தடய அறிவியல் நிபுணர்கள் ஒப்பிட்டு ஆய்வு நடத்த உள்ளனர். அதன்பின்னர் குரல் மாதிரி பரிசோதனை அறிக்கையை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தடய அறிவியல் நிபுணர்கள் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story