கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும்


கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:15 AM IST (Updated: 29 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் ராதா கிருஷ்ண பாண்டியன் பேசினார்.

திருச்சி,

தமிழ்நாடு அரசின் திருச்சி பெருமண்டல தொழிலாளர் துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சி பட்டறையில் தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன் பேசியதாவது:-

கொத்தடிமைகள் ஒழிப்பு முன்பு ஆதிதிராவிடர் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 2017-ம் ஆண்டு முதல் தொழிலாளர் துறைக்கு மாற்றப்பட்டு விட்டது. தொழிலாளர்கள் செய்யும் வேலைக்கு முன்பணம் வாங்கும் பிரச்சினையால்தான் கொத்தடிமைகள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலாளி மட்டுமின்றி அவரது குடும்பமே அதில் சிக்கி கொள்கிறது. இவர்கள் பொருளாதார மற்றும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், அவர்களின் அன்றாட செயல்பாடு மற்றும் உரிமை பறிக்கப்படுகிறது. செங்கல் சூளைகளில்தான் அதிக அளவில் கொத்தடிமைகள் பழக்கம் உள்ளது.

18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் திருமண செலவுகளுக்கு பணம் தருவதாக, ‘சுமங்கலி திட்டம்’ என்ற பெயரில் பஞ்சு ஆலைகளில் கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை விடுதிகளிலேயே தங்க வைக்க கூடாது. பஞ்சு ஆலைகளில் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த பணிகளில் கூட இந்த பழக்கம் உள்ளது. குறிப்பாக கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். கொத்தடிமைகளை மீட்கும் பொறுப்பு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் குறித்து முதல் தகவல் அளிக்கும் கடமை தொழிலாளர் துறைக்கு உள்ளது.

கொத்தடிமை முறை குறித்து தெரிந்தாலும் அதற்குரிய சட்ட திட்டங்களை அறிந்து கொண்டு அவர்களை மீட்க வேண்டும். இதுபோன்ற முறையில் மீட்கப்படும் ஆண்களுக்கு ரூ.1 லட்சம், பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.3 லட்சம் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து வசூலித்து வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. உடனடி நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். எனவே, கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும். அந்த நிலையை எய்திட அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தொழிலாளர் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் தர்மசீலன், இணை ஆணையர் லட்சுமிகாந்தன் (திண்டுக்கல்) மற்றும் தொழிலாளர் துறையினர், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

Next Story