நாகூரில், ஆட்டோ கவிழ்ந்து 5 மீனவ பெண்கள் உள்பட 7 பேர் காயம்


நாகூரில், ஆட்டோ கவிழ்ந்து 5 மீனவ பெண்கள் உள்பட 7 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Jun 2018 10:45 PM GMT (Updated: 28 Jun 2018 9:39 PM GMT)

நாகூரில் ஆட்டோ கவிழ்ந்து 5 மீனவ பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

நாகூர்,

நாகையை அடுத்த நாகூர் ஆரியநாட்டு தெருவை சேர்ந்தவர்கள் சிவக்குமார் மனைவி கலா (வயது35), ஆறுமுகம் மனைவி சுமித்ரா (35), புஷ்பராஜ் மனைவி மகேஸ்வரி (30), ரத்தினவேல் மனைவி ஜெயப்பிரியா (35), ரமேஷ் மனைவி இன்பவள்ளி (36). இவர்கள் நாகை மீன் இறங்குதளத்தில் இருந்து மீன்களை வாங்கி வந்து வாஞ்சூர் பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலை நாகையில் மீன்களை வாங்கிய அவர்கள் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக வாஞ்சூருக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை வாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் நாகராஜ் (36) என்பவர் ஓட்டி சென்றார். ஆட்டோ நாகூர் புதிய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சைக்கிளில் சென்ற வடக்கு பால்பண்ணைச்சேரி கீழதெருவை சேர்ந்த சிவகுமார் மகன் இசால்(17) திடீரென சாலையை கடந்துள்ளான். இதனால் திடீரென நாகராஜ் ஆட்டோவை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றுள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ முன்னால் சென்ற சைக்கிளில் மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் இசால், ஆட்டோவில் வந்த மீனவ பெண்கள் 5 பேர், டிரைவர் என 7 பேரும் காயம் அடைந்தனர். மேலும், ஆட்டோவில் கொண்டு வந்த மீன்களும் சாலையில் கொட்டி சிதறின. உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ கவிழ்ந்த நேரத்தில் அந்த சாலையில் வேறு வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story