லாரி மீது கார் மோதல்: தனியார் நிறுவன அதிகாரி, மனைவி உள்பட 3 பேர் பலி


லாரி மீது கார் மோதல்: தனியார் நிறுவன அதிகாரி, மனைவி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 29 Jun 2018 4:30 AM IST (Updated: 29 Jun 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று திரும்பிய போது, ஓசூரில் லாரி மீது கார் மோதியதில் தனியார் நிறுவன அதிகாரி, அவரது மனைவி உள்பட 3 பேர் பலியானார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ளது டி.முதுகானப்பள்ளி. இங்கு தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு ஐதராபாத்தைச் சேர்ந்த கோபாலப்பா (வயது55) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரமா (50). அதே நிறுவனத்தில் மற்றொரு மேலாளராக வாசுதேவராஜ் (45) என்பவர் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி நாதன் (45) அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் நூற்பாலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் அவர்கள் பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்ல காரில் சென்றனர். இவர்கள் சென்ற காரை ஓசூர் அருகே உள்ள கனிமங்கலத்தைச் சேர்ந்த திருமலை (35) என்பவர் ஓட்டிச் சென்றார். அவர்கள் கிரிவலத்தை முடித்து விட்டு நேற்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள தில்லை நகர் அருகில் அதிகாலை 3.30 மணிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் சென்ற கோபாலப்பா, அவரது மனைவி ரமா மற்றும் வாசுதேவராஜ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்றொரு அலுவலரான மீனாட்சி நாதன், டிரைவர் திருமலை ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் காயம் அடைந்த மீனாட்சிநாதன், டிரைவர் திருமலை ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று திரும்பியபோது, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story