கிருமாம்பாக்கத்தில் பரிதாபம்: தண்ணீர் நிரம்பிய அண்டாவுக்குள் தவறி விழுந்து 1½ வயது ஆண் குழந்தை சாவுகவனிக்க தவறியதால் விபரீதம்


கிருமாம்பாக்கத்தில் பரிதாபம்: தண்ணீர் நிரம்பிய அண்டாவுக்குள் தவறி விழுந்து 1½ வயது ஆண் குழந்தை சாவுகவனிக்க தவறியதால் விபரீதம்
x
தினத்தந்தி 29 Jun 2018 5:30 AM IST (Updated: 29 Jun 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கத்தில் வீட்டின் அருகே விளையாடிய போது கவனிக்க தவறியதால் தண்ணீர் நிரம்பிய அண்டாவுக்குள் விழுந்து 1½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பாகூர்,

கிருமாம்பாக்கத்தில் வீட்டின் அருகே விளையாடிய போது கவனிக்க தவறியதால் தண்ணீர் நிரம்பிய அண்டாவுக்குள் விழுந்து 1½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். தனியார் செல்போன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி அனுஸ்ரீ. இவர்களுக்கு 1½ வயதில் ஸ்ரீவர்ஷன் என்ற ஆண் குழந்தையும், பிறந்து 45 நாட்கள் ஆன நிகில் என்ற பெண் குழந்தையும் இருந்தன.

நேற்று காலை வேல்முருகன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். அனுஸ்ரீ தனது குழந்தைகளை மாமியார் தெய்வம் என்பவரிடம் விட்டு விட்டு ஆதார் கார்டு எடுப்பதற்காக வெளியே சென்றிருந்தார்.

இந்தநிலையில் குழந்தை ஸ்ரீவர்ஷன் வீட்டின் அருகே தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த பித்தளை அண்டா அருகில் விளையாடிக்கொண்டு இருந்தது. திடீரன்று குழந்தையை காணவில்லை. அங்கு விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள், குழந்தை ஸ்ரீவர்ஷன் தண்ணீர் நிரம்பிய அண்டாவில் கிடப்பதை கண்டு கூச்சலிட்டனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, தண்ணீர் இருந்த அண்டாவுக்குள் குழந்தை மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனே குழந்தையை மீட்டு கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குழந்தை ஸ்ரீவர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தது. விளையாடிக் கொண்டு இருந்தபோது அருகில் இருந்து பெரியவர்கள் கவனிக்க தவறியதால் நடந்த இந்த துயர சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தை ஸ்ரீவர்ஷன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story