காதல் மனைவியை கொன்ற வழக்கில் கைதான டிரைவர் திடீர் சாவு


காதல் மனைவியை கொன்ற வழக்கில் கைதான டிரைவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 29 Jun 2018 5:36 AM IST (Updated: 29 Jun 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே காதல் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான டிரைவர் திடீரென இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை அண்ணாநகரை சேர்ந்தவர் ராமையா (வயது 24). சரக்கு வேன் டிரைவர். இவருடைய மனைவி ரேணுகாதேவி (21). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ரேணுகாதேவி கோபித்து கொண்டு கொடைரோட்டை அடுத்த ஜே.ஊத்துப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 20-ந்தேதி ராமையா நேரில் சென்று ரேணுகாதேவியை அழைத்தார். பின்னர் 2 பேரும் சரக்கு வேனில் சிறுமலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வழியிலேயே 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமையா தோட்டத்துக்கு செல்லலாம் எனக்கூறி சிறுமலை பழையூரில் காட்டுக்குள் மனைவியை அழைத்து சென்றார். அங்கு ரேணுகாதேவியை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் போலீசாருக்கு பயந்த ராமையா, காட்டுக்குள்ளேயே தலைமறைவாக இருந்தார். உணவு, தண்ணீர் இல்லாமல் 3 நாட்களாக சுற்றித்திரிந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்கிடையே ராமையா காட்டுக்குள் பதுங்கி இருப்பதை அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் தேடி சென்றனர்.

அப்போது காட்டுக்குள் மயங்கிய நிலையில் அவரை மீட்டனர். பின்னர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று சிறையில் இருந்த ராமையாவின் உடல்நிலை திடீரென மீண்டும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

அதேநேரம் காட்டுக்குள் பசியால் தவித்தபோது விஷத்தன்மை கொண்ட கிழங்கு எதையாவது தெரியாமல் அவர் தின்று, அதனால் உடல்நலம் பாதித்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story