ஓட்டப்பிடாரம் அருகே பரிதாபம்: மகன் காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை


ஓட்டப்பிடாரம் அருகே பரிதாபம்: மகன் காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 30 Jun 2018 2:30 AM IST (Updated: 29 Jun 2018 7:39 PM IST)
t-max-icont-min-icon

மகன் காதல் திருமணம் செய்ததால் விரக்தியடைந்த பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர

ஓட்டப்பிடாரம், 

மகன் காதல் திருமணம் செய்ததால் விரக்தியடைந்த பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

ஓட்டல் உரிமையாளர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் பத்மநாபன் (வயது 58). இவருடைய மனைவி சண்முகலட்சுமி (48). இவர்கள் அதே பகுதியில் தூத்துக்குடி– மதுரை சாலையில் ஓட்டல் நடத்தி வந்தனர். இவர்களுக்கு மணிகண்டன் (24) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தற்போது தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பத்மநாபனும், சண்முகலட்சுமியும் வி‌ஷம் குடித்து விட்டு மணிகண்டனுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் பதறி போன மணிகண்டன் உடனே வீட்டுக்கு விரைந்து வந்தார். வீட்டில் தாயும், தந்தையும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

பரிதாப சாவு

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பத்மநாபனும், மதியம் சண்முகலட்சுமியும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலா விசாரணை நடத்தினார்.

பரபரப்பு தகவல்கள்

போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:–

மணிகண்டன் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். அதே பஸ்சில் கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (24) என்ற பெண்ணும் சென்று வந்தார். மாரியம்மாள் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்தார்.

ஒரே பஸ்சில் தினமும் சென்றதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றதால் காதலுக்கு இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கோவிலில் திருமணம்

ஆனாலும் இருவரும் காதலில் பின்வாங்கவில்லை. மாறாக, ஒரு வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று மாரியம்மாளிடம், மணிகண்டன் கூறி இருந்ததாக தெரிகிறது. அதன்படி அவருக்கு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. உடனே திருமணத்துக்கு தயார் ஆனார். அவரது திருமணத்துக்கு மணிகண்டனின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தங்களுக்கு ஒரே மகனாக நீ இருப்பதால், உனது திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்று கூறி வந்துள்ளனர். ஆனாலும் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதில் மணிகண்டன் உறுதியாக இருந்தார். அதன்படி மாரியம்மாளை ஒரு கோவிலில் வைத்து மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். தங்களது சொல் பேச்சை மகன் கேட்கவில்லையே என்று விரக்தியடைந்த பத்மநாபனும், சண்முகலட்சுமியும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

பெற்றோரும் காதல் திருமணம்

தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் பெற்றோரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் மகனின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பதி உயிரை விட்ட சம்பவம் எப்போதும் வென்றான் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story