பாவூர்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்தது: குழந்தை உள்பட 2 பேர் பலி குற்றாலம் சென்றபோது பரிதாபம்
பாவூர்சத்திரம் அருகே குற்றாலம் சென்றபோது வேன் கவிழ்ந்து ஒரு வயது குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே குற்றாலம் சென்றபோது வேன் கவிழ்ந்து ஒரு வயது குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்ததுநெல்லை மேலப்பாளையத்தை அடுத்த தருவை புதுகாலனி பகுதியை சேர்ந்த 25 பேர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஒரு வேனில் குற்றாலத்தில் குளிக்க புறப்பட்டு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த பால்மாரி என்பவர் வேனை ஓட்டிச் சென்றார். அம்பாசமுத்திரம் வழியாக சென்ற வேன், காலை 7 மணி அளவில் பாவூர்சத்திரத்தை கடந்து திரவியநகர் அருகே சென்றது.
அப்போது எதிரே சைக்கிளில் வந்த ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை லேசாக திருப்பியுள்ளார். இதனால் ரோட்டோரத்தில் வேன் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்தவர்கள் அபயக் குரல் எழுப்பினார்கள்.
2 பேர் பலிஇந்த விபத்தில் முருகன் மகன் முத்துச்செல்வம் (வயது 25) என்பவர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பாலமுருகன் என்பவரின் ஒரு வயது மகள் ப்ரீத்தி பாலா மற்றும் ராமச்சந்திரன் மகள் சுகன்யா (15), சந்தன மாரியப்பன் மனைவி முத்துசெல்வி (23), முருகேஷ் மகன் புவனேஷ் (13), காளி மகள் வான்மதி (19), பால்ராஜ், சண்முகவேல், வேன் டிரைவர் பால்மாரி ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி பாவூர்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், பொதுமக்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குழந்தை ப்ரீத்தி பாலா பரிதாபமாக இறந்தாள். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
போலீசார் விசாரணைவிபத்தில் பலியான முத்துசெல்வத்தின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றாலத்துக்கு சென்றபோது விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.