108 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்


108 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 30 Jun 2018 2:30 AM IST (Updated: 29 Jun 2018 8:18 PM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் 108 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நாங்குநேரி, 

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் 108 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

வானமாமலை பெருமாள் கோவில்

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலும் ஒன்றாகும். பழமையும், பெருமையும் வாய்ந்த இக்கோவிலில் தை அமாவாசையையொட்டி எண்ணெய் காப்பு திருவிழா, பங்குனி மாத தேரோட்டம், சித்திரை மாத தேரோட்டம் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்தது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 23–ந் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. முன்னதாக யானை மீது கும்பத்தில் புனிதநீர் எடுத்துவந்து மாடவீதிகளில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

கும்பாபிஷேகம்

விழா நாட்களில் தினமும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகளும் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜையில் இருந்து புனிதநீர் கும்பம் மேளதாளங்கள் முழங்க கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தது. பின்னர் புனிதநீர் கோபுர விமான கலசத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, 9 மணி அளவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா, கோபாலா என பக்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோவில் உள்மாட வீதிகள் மற்றும் தெருக்களில் ஏராளமான பக்தர்கள் தங்களது வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்று கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். இதையொட்டி கோவில் சன்னதி தெருவில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

108 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

விழாவில் வசந்தகுமார் எம்.எல்.ஏ., ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. மாசானமுத்து, நாங்குநேரி தாசில்தார் வர்கீஸ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், பேரவை இணை செயலாளர் பரமசிவ அய்யப்பன் ஆகியோர் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினர். கோவில் மடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு அஜித் ராவத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

108 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story