7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பயன்பாட்டிற்கு வருவது எப்போது?


7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
x
தினத்தந்தி 30 Jun 2018 3:15 AM IST (Updated: 30 Jun 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை பகுதியில் கடந்த 7ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை வளந்துவரும் நகரமாக உள்ளது. இங்கு நகர் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நகராட்சி, சார்பதிவாளர், சப்–கலெக்டர், தாலுகா அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தீயணைப்பு அலுவலகம் தேவகோட்டை ராம்நகரில் செயல்பட்டு வருகிறது.

தேவகோட்டை தாலுகா முழுவதும் உள்ள கிராமத்தில் அவசர உதவிக்கு இங்குள்ள தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையத்தில் ஒரு அலுவலர் மற்றும் 12 தீயணைப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 13 பேருக்கு தமிழக அரசு சார்பில் கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த பணிக்காக டெண்டர் எடுத்த நபர்கள் மந்தமான நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த குடியிருப்பு வீடுகளை கட்டி வருகின்றனர்.

ஆனால் இந்த பணி தற்போது வரை முடிந்த பாடியில்லை. இதனால் இங்குள்ள தீயணைப்பு படை வீரர்கள் வெளி பகுதியில் தங்களது குடும்பத்தை வாடகைக்கு அமர்த்தி வசித்து வருகின்றனர். மேலும் இங்கு பணியாற்றும் சில வீரர்கள் தேவகோட்டை நகரை விட்டு வெளியிடத்தில் தனித்தனியாக குடியிருந்து வருவதால் அவசரகால தேவைக்கு அவர்களை அழைக்கும் போது அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

பொதுவாக ஒரு கட்டிடத்திற்கு 30ஆண்டுகள் தான் தரம் மதிப்பு மற்றும் ஆயுட்காலம் உள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடம் கட்டுவதற்கு 10ஆண்டுகள் வரை ஆனால் மீதமுள்ள 20ஆண்டுகள் எவ்வாறு அதில் குடியிருக்க முடியும். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த குடியிருப்பு கட்டும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தீயணைப்பு படை வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story