50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த குடிசை பகுதியை மறக்க முடியாத பெண்: இடிக்கப்பட்ட வீடுகளை தினமும் பார்த்து விட்டு செல்கிறார்


50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த குடிசை பகுதியை மறக்க முடியாத பெண்: இடிக்கப்பட்ட வீடுகளை தினமும் பார்த்து விட்டு செல்கிறார்
x
தினத்தந்தி 30 Jun 2018 4:30 AM IST (Updated: 30 Jun 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த குடிசை பகுதியை மறக்க முடியாமல் தினமும் வந்து பார்த்து விட்டு செல்லும் பெண்ணை பற்றிய உருக்கமான தகவல் கிடைத்து உள்ளது.


திருச்சி,

50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த குடிசை பகுதியை மறக்க முடியாமல் தினமும் வந்து பார்த்து விட்டு செல்லும் பெண்ணை பற்றிய உருக்கமான தகவல் கிடைத்து உள்ளது.

திருச்சி சுந்தர் நகர் மெயின்ரோட்டில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் எதிரில் இந்திரா நகர் என்ற பெயரில் ஒரு குடிசை பகுதி இருந்தது. ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக சுமார் 200 குடும்பத்தினர் குடிசைகள் அமைத்தும், ஓடுகள் வேயப்பட்ட வீடுகளை கட்டியும் வசித்து வந்தனர். கட்டிட வேலை செய்பவர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் இந்த குடிசை பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வந்தனர்.

ராணுவ அதிகாரிகள் அவ்வப்போது வீடுகளை காலி செய்யுங்கள் என மிரட்டுவதும், குடிசை பகுதி மக்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து தங்களுக்கு கால அவகாசம் கேட்டு மனுக்களை கொடுப்பதுமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களது வாழ்க்கை ஓடியது. சில நேரங்களில் ராணுவ அதிகாரிகளின் நெருக்கடி அதிகரிக்கும் நேரங்களில் குடிசை பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக்கொள்வதற்காக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தி இருக்கிறார்கள்.

எவ்வளவு நாள் தான் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போன்று பயந்த நிலையிலேயே வாழ்வது என சிந்தித்த அப்பகுதி மக்கள் இறுதியாக தங்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டி கொடுத்தால் செல்ல தயார் என ராணுவ அதிகாரிகளிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து திருச்சியை அடுத்த நாகமங்கலம் என்ற இடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இவர்களுக்கென்றே தனியாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது இந்த குடிசைகளில் வசித்த அனைத்து மக்களும் வீடுகளில் இருந்த தங்களது பண்ட பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு நாகமங்கலத்திற்கு சென்று புதிய வீடுகளில் குடியேறிவிட்டனர்.

இதனை தொடர்ந்து இந்திரா நகர் பகுதியில் இருந்த குடிசை வீடுகள் அனைத்தும் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டு விட்டது. பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியை போல் வீட்டின் கூரைகள், சுவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக காட்சி அளிக்கிறது. இந்திரா நகர் குடிசை பகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக நாகமங்கலத்தில் குடியேறி விட்டாலும் வீட்டு வேலை உள்ளிட்ட தங்களது அன்றாட ஜீவாதாரத்திற்காக திருச்சி நகருக்கு தான் வந்து செல்கிறார்கள். அப்படி வருபவர்கள் ஏற்கனவே தாங்கள் வசித்த பகுதியை பார்க்காமல் செல்வது இல்லை.

இங்கு ஏற்கனவே வசித்த லட்சுமி (வயது52) என்ற பெண் கூறுகையில் ‘எனது தந்தை தான் இந்த பகுதியில் முதன் முதலாக குடிசை போட்டிருக்கிறார். அதன்பின்னரே பலரும் வந்தனர். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த குடிசை பகுதியில் தான். ஐம்பதாண்டுக்கும் மேலாக வசித்த இந்திரா நகரை எங்களால் மறக்க முடியவில்லை. தினமும் இங்கு வந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. வேலை முடிந்த பின்னர் கூட பலரும் இங்கிருந்தே நாங்கள் தற்போது குடியிருந்து வரும் நாகமங்கலத்திற்கு லாரியில் செல்கிறோம் என உருக்கத்துடன் கூறினார்.

Next Story