பாப்பாரப்பட்டி அருகே விவசாய தொழிலாளர்கள் சாலைமறியல்


பாப்பாரப்பட்டி அருகே விவசாய தொழிலாளர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 Jun 2018 4:45 AM IST (Updated: 30 Jun 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே விவசாய தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் பிக்கிலி ஊராட்சியில் பிக்கிலி, கொல்லப்பட்டி, பெரியூர், பூதிநத்தம், புதுகரம்பு, மலையூர், சக்கிலிநத்தம், தண்டுகாரனஅள்ளி, குறவன் திண்ணை உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக நூறுநாள் வேலை வழங்கப்படவில்லை என்று விவசாய தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். தற்பொழுது பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட சில கிராமங்களில் நூறுநாள் வேலை வழங்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை செய்யத்தொடங்கி உள்ளனர்.

இந்தநிலையில் புதுகரம்பு, அம்மன் நகர், தண்டுகாரனஅள்ளி, குறவன்திண்ணை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் தங்களுக்கும் நூறுநாள் வேலைதிட்டத்தில் வேலைவழங்கக்கோரி நேற்று மதியம் பாப்பாரப்பட்டி அருகே புதுகரம்பு பஸ்நிறுத்தத்தில் பஸ்களை சிறைப்பிடித்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story