கரூரில் நடைபெற்ற ரத்ததான முகாமில் போலீஸ் அதிகாரி மயங்கியதால் பரபரப்பு


கரூரில் நடைபெற்ற ரத்ததான முகாமில் போலீஸ் அதிகாரி மயங்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jun 2018 4:45 AM IST (Updated: 30 Jun 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

கரூரில், மொத்தம் 85 போலீசார் ரத்ததானம் செய்தனர். அப்போது ரத்ததான முகாமில் போலீஸ் அதிகாரி திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூரில், மொத்தம் 85 போலீசார் ரத்ததானம் செய்தனர். அப்போது ரத்ததான முகாமில் போலீஸ் அதிகாரி திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்ட போலீஸ்துறை சார்பில் ரத்ததான முகாம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ரத்ததானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கரூர் மாவட்ட போலீசார் ரத்தம் வழங்கினர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், ஊழியர்கள் ரத்தத்தை தானமாக பெற்றனர்.

மொத்தம் 85 போலீசார் ரத்ததானம் செய்திருந்தனர்.

முகாமில், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதார் என்பவர் ரத்தம் வழங்கிவிட்டு நாற்காலியில் அமர்ந்து பழரசம் அருந்தி கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசாரும், மருத்துவ ஊழியர்களும் அவருக்கு தண்ணீர் வழங்கி ஆசுவாசப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து ரத்ததானம் வழங்கிய போலீசாருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், சாலை விபத்துகளில் காயமடைந்தோர் மற்றும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது அதிகளவு ரத்தம் தேவைப்படுகிறது. அவர்களது உயிரை காப்பாற்றுவதில் போலீசாரின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் ரத்தம் வழங்கிய அனைவரையும் பாராட்டுகிறேன் என்றார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பாரதி, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சிற்றரசு, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்மொழி அரசு உள்பட போலீசார் உடன் இருந்தனர்.

Next Story