வரிபாக்கி வைத்துள்ளவர்களின் படங்களையும் வெளியிட முடிவு கவர்னர் கிரண்பெடி ஆலோசனை
புதுவை அரசுக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்களின் படங்களையும் வெளியிடுவது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் மின்துறையில் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்கள் பத்திரிகைகளில் அம்பலப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது பாக்கி தொகையை பலர் செலுத்தி வருகின்றனர். பாக்கி தொகையை செலுத்தாத முக்கிய பிரமுகர்கள், அவர்களது உறவினர்கள் குறித்து பொதுமக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
மின்துறையை தொடர்ந்து உள்ளாட்சி, கலால், வணிக வரி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளிலும் வரிபாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பான நடவடிக்கைகளில் கவர்னர் கிரண்பெடி தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்காக அரசு செயலாளர்கள், இயக்குனர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
இந்தநிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அரசு செயலாளர்கள் கந்தவேலு, பிரசாந்த்குமார் பாண்டே, ஜூலியட் புஷ்பா, வணிக வரித்துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ், கலால்துறை துணை ஆணையர் தயாளன், சிறப்பு அதிகாரி முத்துமீனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வரி பாக்கிகள் விவரம், அதை எவ்வாறு வசூலிப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வரிசெலுத்தப்படாத சொத்துகளை ஏலம் விடுவது, வரி செலுத்தாதது தொடர்பாக சம்பந்தப்பட்ட சொத்துகள் உள்ள இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைப்பது, வரி செலுத்தாதவர்களின் பெயர்களை தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியிடுவது, அவர்களின் பெயர் மற்றும் படங்களை இணையதளத்தில் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
சட்டத்துறை செயலாளருடன் மாதந்தோறும் வணிக வரித்துறை ஆணையர் ஆலோசனை நடத்தி வழக்குகளை விரைந்து முடிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டு புதுவை அரசு ரூ.1,075 கோடி கடன்பெற்றுள்ளது. ஏற்கனவே பெற்ற கடன்களில் ரூ.350 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.
மக்கள் உரிய நேரத்தில் வரிகளை செலுத்தி வெளிமார்க்கெட்டில் அரசு கடன் வாங்குவதை தவிர்த்து எதிர்கால தலைமுறையினரை காக்கவேண்டும் என்று சமூக வலைதளத்தில் கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.