அரசின் திட்டங்களை செயல்படுத்த புள்ளி விவரங்கள் அவசியம், அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
அரசின் திட்டங்களை செயல்படுத்த புள்ளி விவரங்கள் அடிப்படையாக உள்ளன என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விவரத்துறை சார்பில் சாரத்தில் உள்ள புள்ளிவிவரத்துறை கருத்தரங்க அறையில் நேற்று 12–வது தேசிய புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அரசு செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இயக்குனர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
புள்ளி விவர கையேடு, புதுச்சேரி ஒரு கண்ணோட்டம், புள்ளி விவரத்துறையின் ஆண்டறிக்கை, விலைவாசி சிற்றேடு ஆகியவற்றை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:–
புதுவை புள்ளி விவரத்துறை அரசுக்கு பல்வேறு தகவல்களை அளிக்கிறது. அதுகுறித்த விவரங்களை மக்களிடம் இருந்து திரட்டி தொகுத்து அரசுக்கு வழங்குகிறது. இதனால் என்ன லாபம்? என்று மற்றவர்கள் நினைக்கலாம்.
அரசின் பல்வேறு துறைகள் மூலம் இலவச வேட்டி, சேலை, தொழிற்கருவிகள், மானியங்கள் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதனை செயல்படுத்துவதற்கு புள்ளி விவரம் அடிப்படை தேவையாக உள்ளது.
புள்ளி விவரங்கள் இல்லாமல் பட்ஜெட் கூட போடமுடியாது. தனிமனித வருமானம், அரசின் வருவாய், செலவினம், கடன் அளவு போன்றவை எல்லாம் புள்ளி விவரத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.
அரசு எந்த சேவை செய்தாலும் அதற்கு அடிப்படையாக புள்ளி விவரம் தேவை. அந்த அளவுக்கு அது அவசியமானதாகும். இந்த விவரங்கள் சரியாக இல்லாவிட்டால் திட்டமிடுதல் சரியாக இருக்காது. துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.