ஓட்டை, உடைசலான மேற்கூரையால் அச்சத்தில் பயணிகள்


ஓட்டை, உடைசலான மேற்கூரையால் அச்சத்தில் பயணிகள்
x
தினத்தந்தி 30 Jun 2018 4:15 AM IST (Updated: 30 Jun 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

பிராட்வே பஸ் நிலையத்தில் ஓட்டை, உடைசலான மேற்கூரை உடைந்து விழும் நிலையில் இருப்பதால் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்தது பிராட்வே பஸ் நிலையம். கோயம்பேடு பஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்பு பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

தற்போது இங்கிருந்து மாநகர பஸ் சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பிராட்வே பஸ் நிலையத்தின் அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்துதான் தமிழகத்தின் எந்த ஒரு ஊருக்கும் தூரம் கணக்கிடப்பட்டு வருகிறது.

ஒரு காலக்கட்டத்தில் சென்னை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிராட்வே பஸ் நிலையம் தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த பிராட்வே பஸ் நிலையம் தற்போது மிகவும் அலட்சியமாகவும், மோசமாகவும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இன்றியும், பராமரிக்கப்படாத பஸ் நிலையங்களில் ஒன்றாகவும் மாறிவிட்டது.

பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 800–க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் சேவைகளை சென்னை ஐகோர்ட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கிகள் உள்பட அரசு மற்றும் தனியார் கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள், வேலை நிமித்தமாக செல்பவர்கள் என லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பிராட்வே பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நடைமேடையின் மேற்கூரை ஓட்டை, உடைசலுடன் காணப்படுகிறது. இதனால் மழைக்கும், வெயிலுக்கும் பயணிகள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேற்கூரை வலு இழந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் உடைந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தை பயணிகளிடையே ஏற்படுத்துகிறது. இதனால் பெரும்பாலான பயணிகள் நடைமேடையை பயன்படுத்துவதையே தவிர்த்து வருகின்றனர்.

பிராட்வே பஸ் நிலையத்தின் உள்ளே பெருநகர சென்னை மாநகராட்சியின் இலவச கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் கட்டண கொள்ளைக்கு பயந்து, நடைமேடையை ஒட்டிய சுவரை திறந்தவெளி கழிப்பிடமாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நடைமேடையில் செல்லும் பயணிகள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லவேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. பிராட்வே பஸ் நிலையத்தின் உள்ளே சாலை குண்டும், குழியுமாக ராட்சத பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது பஸ்களுக்கான பராமரிப்பு செலவை அதிகப்படுத்துவதோடு, மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் செல்வதற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுதவிர நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பஸ்களின் நடுவே பயணிகள் ஆபத்தான நிலையில் செல்லவேண்டிய நிலை உள்ளது.

இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால், பஸ் நிலையமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சமூக விரோதிகள் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே சென்னை நகரின் அடையாளத்தின் ஒன்றாக இருக்கும் பிராட்வே பஸ் நிலையத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புனரமைப்பு செய்யவேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story