மதுரை கோட்டத்துடன் நெல்லை அரசுபோக்குவரத்து கழகத்தை இணைக்கும் முயற்சியை கைவிடவேண்டும் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தை மதுரை கோட்டத்துடன் இணைக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ, கூறினார்.
நெல்லை,
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தை மதுரை கோட்டத்துடன் இணைக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ, கூறினார்.
நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வசந்தகுமார் நேற்று பாளையங்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
மதுரா கோட்ஸ் ஆலைநெல்லை மாவட்டத்தில் அதிக தொழிலாளர்கள் வேலை பார்க்கும் மதுரா கோட்ஸ் ஆலையின் சாயக்கழிவு தாமிரபரணி ஆற்றில் கலப்பதாக கூறி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து ஆலையை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது ஆலை நிர்வாகத்தினர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்று ஜெனரேட்டர் உதவியுடன் ஆலையை இயக்குகிறார்கள். தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்கவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
ஆனால் அதிக தொழிலாளர்கள் வேலை செய்கின்ற இந்த ஆலை நிர்வாகம் கழிவுநீரை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்துவதற்கு ரூ.15 கோடியில் ஒரு திட்டம் தயாரித்து அந்த பணி 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. 10 சதவீத பணிகளும் விரைவில் முடிவடையும் என்று கூறுகிறார்கள். எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்காக இந்த ஆலைக்கு மின்சாரம் வழங்கி ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் உள்நோக்கத்துடன் ஆலை மூடப்பட்டதாக இருந்தால் அது நல்லது அல்ல. ஆலையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நெல்லை அரசு போக்குவரத்து கழகம்தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மத்திய–மாநில அரசுகள் மாற்றுவேலை வழங்கவேண்டும். அது வரை சம்பளம் மற்றும் ஊக்க தொகை வழங்கவேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என்று பெரிய பெரிய மதக்குருக்கள் கோரிக்கை வைக்கும் நிலை வந்து உள்ளது என்றால் அவர்கள் பிரதமர் மோடியிடம் தொடர்பு வைத்து உள்ளவர்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தை மதுரை கோட்டத்தில் இருந்து பிரிக்க சட்டசபையில் பேசியும், அமைச்சரை சந்தித்து பேசியும் தான் பிரித்து தனிக்கோட்டமாக கொண்டு வந்தோம். இந்தநிலையில் மீண்டும் நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்டத்தை மதுரை கோட்டத்துடன் இணைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் நெல்லை மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தை மதுரை கோட்டத்துடன் இணைக்கும் முயற்சியை கைவிடவேண்டும்.
சிவாஜி மணிமண்டபம்நாங்குநேரி தொகுதியில் 41–க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு பஸ்கள் விடவேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளேன். குற்றலாம் பாபநாசம், கூந்தன்குளம், களக்காடு, நாங்குநேரி, கிருஷ்ணாபுரம், நெல்லை ஆகியவற்றை சுற்றுலா தலமாக அறிவித்து ஒரு நாளைக்கு அனைத்து ஊருக்கும் 2 முறை பஸ்களை இயக்கவேண்டும். குடிமராமத்தில் எனது தொகுதியில் 105 குளங்களை மராமத்து செய்து உள்ளனர். இன்னும் 100 குளங்களை மராமத்து செய்யவேண்டும். நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் நடந்து வருகிறது பணியை துரிதப்படுத்தவேண்டும். முறைகேடு நடந்தால் அது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நடிகர் சிவாஜிகணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து உள்ளதை பாராட்டுகிறேன். சிவாஜி மணிமண்டபத்தின் உள்ளே இருகின்ற சிலையை வெளியே எடுத்து மண்டபத்தின் முன் வைக்கவேண்டும். அல்லது புதிய சிலை வைக்கவேண்டும், அரசு அனுமதி அளித்தால் எனது சொந்த செலவில் சிவாஜிக்கு மணிமண்டபத்தின் முன்பு வைக்க சிலை செய்து கொடுக்க தயாராக உள்ளேன்.
5 ஆயிரம் மரக்கன்றுகள்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படுகின்ற மரங்களுக்கு பதிலாக கூடுதலாக மரங்கள் வைக்கவேண்டும். தென்காசி 4 வழிச்சாலைக்காக மரம் வெட்டிய இடத்தில் சாலை அமைத்த பிறகு மரங்கள் வைப்பதற்கு மரங்கள் தனியாக வளர்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதிக அளவில் மரங்கள் வளர்க்கவேண்டும். நான் சென்னையில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்த்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர்கள் எஸ்.கே.எம்.சிவகுமார், சங்கரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நிர்வாகிகள் ஆலடிசங்கரைய்யா, ராஜேஷ்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.