நவீன தகவல் தொழில்நுட்பத்துடன் நீலகிரி மாவட்ட இணைய தள சேவை தொடங்கியது


நவீன தகவல் தொழில்நுட்பத்துடன் நீலகிரி மாவட்ட இணைய தள சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 1 July 2018 4:30 AM IST (Updated: 1 July 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

நவீன தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய நீலகிரி மாவட்ட இணையதள சேவை தொடங்கி உள்ளது. இதன் மூலம் அரசுத்துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

ஊட்டி,

ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நவீன தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய நீலகிரி மாவட்ட இணையதள சேவையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:–

இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு துறைகள் குறித்த பொதுமக்களின் பயன்பாட்டிற்கான நவீன தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய இணையதளத்தை தமிழகத்தில் சேலம் மாவட்டம், ஆந்திர மாநிலம் ஈஸ்ட் கோதாவரியிலும் காணொலி மூலம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் லீttஜீs://ஸீவீறீரீவீக்ஷீவீs.ஸீவீநீ.வீஸீ என்ற மாவட்ட இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த இணையதளம் மூலம் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களை ஸ்மார்ட் போன், மடிக்கணினி, கணினி உள்ளிட்ட சாதனங்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறைகளின் விவரங்கள், செயல்பாடுகளை இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும். இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அரசுத்துறைகளில் தங்களுக்கு தேவையான விவரங்களை அறிந்து கொள்ள சிறப்பாக புதிய தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் இணையதள விதிமுறைகளை 100 சதவீதம் முழுமையாக பின்பற்றி புதிய தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு இணையதள பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் குறித்த அனைத்து பொது தகவல்கள், வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது இடங்களில் இருந்தே தேவையான அரசுத்துறையின் சேவைகள் மற்றும் விவரங்களை பெறலாம். இந்த இணையதளத்தில் தினமும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்படும் மாவட்ட செய்தி வெளியீடுகள் மற்றும் புகைப்படங்களை காண முடியும். இணையதளம் மூலம் காலவிரயத்தை தவிர்க்கவும், அடுத்த தலைமுறைக்கு தேவையான முன்னேற்ற நடவடிக்கைக்காகவும் மாவட்ட நிர்வாகத்தால் தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், தேசிய தகவலியல் மைய அலுவலர் ஜெகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story