ஊட்டியில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் டயர் வெடித்து தடுப்புச்சுவரில் மோதியது, சிறுமி காயம்
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் டயர் வெடித்து தடுப்புச்சுவரில் மோதியது. இதில் சிறுமி காயம் அடைந்தார்.
ஊட்டி,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனிஷ். இவருக்கு திருமணமாகி 3½ வயதில் அஸ்வினி என்ற மகள் இருக்கிறாள். அனிஷ் தனது குடும்பத்தினர் 6 பேருடன் ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்தார். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று காரில் புறப்பட்டனர். காரை அனிஷ் ஓட்டினார். இந்த நிலையில் நேற்று மாலை ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலக சாலையில் கார் சென்று கொண்டு இருந்தது.
அப்போது காரின் முன்பக்க டயர் பெரும் சத்தத்துடன் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர தடுப்புச்சுவர் மற்றும் தடுப்பு கம்பிகள் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் கண்ணாடி உடைந்து விழுந்ததில் அஸ்வினிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறுமி கதறி அழுதாள். சேரிங்கிராஸ் பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனியின் வாகனம் நின்றது. இதனை பார்த்த அந்த வாகன டிரைவர் சிவக்குமார் (போலீஸ்காரர்), போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் காயம் அடைந்த சிறுமியை உடனடியாக மீட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு வாகனத்தில் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
விபத்தில் சிறுமி அஸ்வினிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது தெரியவந்தது. அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காரில் இருந்த மற்ற 5 பேருக்கு காயம் ஏதும் ஏற்பட வில்லை. காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் மீட்பு வாகனம் மூலம் விபத்துக்குள்ளான காரை மீட்டு சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். விபத்தில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததோடு, தடுப்புச்சுவர் உடைந்து சிறிது தூரம் தள்ளிபோய் விழுந்து கிடந்தது. அந்த சமயத்தில் நடைபாதையில் பொதுமக்கள் யாரும் நடந்து செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் காயம் அடைந்த சிறுமியை உடனே மீட்டு போலீஸ் வாகனத்தில் கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்த போலீஸ்காரர் சிவக்குமாருக்கும், போலீசாருக்கும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர்.