தீர்ப்பு வழங்குவது முக்கியமில்லை; தீர்ப்பின் தரம் தான் முக்கியம், தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பேச்சு


தீர்ப்பு வழங்குவது முக்கியமில்லை; தீர்ப்பின் தரம் தான் முக்கியம், தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பேச்சு
x
தினத்தந்தி 1 July 2018 4:45 AM IST (Updated: 1 July 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றத்தில் எவ்வளவு விரைவாக தீர்ப்பு வழங்குகிறோம் என்பது முக்கியமில்லை, தீர்ப்பின் தரம் தான் முக்கியம். அதில் எந்தவித சமரசத்திற்கும் இடம் இல்லை என ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.

மதுரை,

பெண்கள் சந்திக்கும் சமூக, அரசியல் பிரச்சினைகள் உரிமைகள் குறித்து நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆங்கிலத்தில் எழுதிய நூலின், தமிழ் மொழியாக்கம் நூல் வெளியீட்டு விழா மதுரை கே.கே.நகரில் உள்ள கிருஷ்ணய்யர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். அதை ஐகோர்ட்டு மதுரை கிளை நிர்வாக நீதிபதி சி.ஜி.செல்வம் பெற்றுக்கொண்டார். முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தி.வி.இப்ராஹிம் கலிபுல்லா வாழ்த்தி பேசினார். நூல் ஆசிரியரும், நீதிபதியுமான பிரபா ஸ்ரீதேவன் ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் சுவாமிநாதன், அனிதா சுமந்த், சுரேஷ்குமார், கிருஷ்ண குமார், முன்னாள் போலீஸ் ஐ.ஜி. செண்பகராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:–

நீதிபதி பிரபாவின் நூல் இந்திய மக்களின் சமதர்மம், சமத்துவம், சம நீதி குறித்து அரசியலமைப்பின் முகப்புரை பேசுகிறது. மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை கூடாது என சட்டம் உள்ளது. தடை செய்யப்பட்டுஉள்ளது. அந்த வேலைக்கு ஆட்களை அமர்த்துபவர்களுக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உண்டு. சென்னை ஐகோர்ட்டில் 63 நீதிபதிகளில் 12 பெண் நீதிபதிகள் தான் உள்ளனர். ஆண், பெண் சமநிலை விரைவில் சீராகும் என நான் நம்புகிறேன். நீதிபதி பதவி என்பது பணி இல்லை. சேவை. பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது. நீதியை நிலை நாட்ட வேண்டும். சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற மட்டுமே செய்கிறார்கள்.

நிர்வாகத்தில் உள்ளவர்கள் சட்டத்தை அமல்படுத்துகின்றனர். நீதிமன்றம் சட்டத்தில் உள்ள பிரச்சினைகள், நீதி கிடைக்க நீதிமன்றம் பாடுபடுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் சமத்துவம், ஆண், பெண் சம நிலை, நன்னெறி குறித்து கற்று கொடுக்க வேண்டும். நீதிபதி, நீதித்துறை சேவைத்துறை, யாருக்கு நீதி வேண்டுமோ அவர்கள் நீதிமன்றத்தை தயங்காமல் நாட வேண்டும். நீதிபதி கடினமாக அர்ப்பணிப்புடன் கவனத்துடன் பணியாற்ற வேண்டியதுஉள்ளது.

நீதிபதிகள் தீர்ப்பு வழங்குபவர்கள் மட்டும் அல்ல. அதற்கு முன்னதாக வழக்கறிஞர்களின் வாதம் கேட்டு, நீதிபதி கவனத்துடன் தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்பு விரைவாக வழங்க வேண்டும், அதே நேரத்தில் தரமானதாக இருக்க வேண்டும். தீர்ப்புகள் பேச பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளில் தரம் முக்கியம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எவ்வளவு விரைவாக தீர்ப்பு வழங்குகிறோம் என்பது முக்கியமில்லை, தீர்ப்பின் தரம் தான் முக்கியம். அதில் எந்தவித சமரசத்திற்கும் இடம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story